மக்களவைத் தேர்தலுக்கு 1,003 பேர்; இடைத்தேர்தலுக்கு 389 பேர் வேட்புமனுத் தாக்கல்! | 1003 nominations filed in TN for lok sabha elections

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:25 (27/03/2019)

மக்களவைத் தேர்தலுக்கு 1,003 பேர்; இடைத்தேர்தலுக்கு 389 பேர் வேட்புமனுத் தாக்கல்!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 1,003 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். 

வேட்புமனுத் தாக்கல்

மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் ஒரேகட்டமாக வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. அதேபோல், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வருகிற 29-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

மக்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்

அ.தி.மு.க மற்றும் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிகளின் வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், கடைசி நாளான இன்று அ.ம.மு.க வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 1003 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அவர்களில் ஆண்கள் 880 பேர், பெண்கள் 121 பேர் மற்றும் 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். அதிகபட்சமாக சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் 39 ஆண்கள், 9 பெண்கள் என 48 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். குறைந்தபட்சமாக நீலகிரித் தொகுதியில் போட்டியிட 6 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். திருவண்ணாமலைத் தொகுதியில் போட்டியிட 43 பேரும், பொள்ளாச்சி, கரூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தலா 41 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். 

இடைத்தேஎர்தல் வேட்புமனுத் தாக்கல்

அதேபோல், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட 324 ஆண்கள், 65 பெண்கள் உட்பட 389 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 59 பேரும் குறைந்தபட்சமாக சோளிங்கர், குடியாத்தம் மற்றும் மானாமதுரை ஆகிய தொகுதிகளில் போட்டியிட 7 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். நாடு முழுவதும் 7 கட்டங்களாகப் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.