``அது அண்ணா தி.மு.க இல்லை, அடிமை தி.மு.க" - விளாசும் உதயநிதி ஸ்டாலின்..! | Udhayanidhi stlain slams admk party

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:26 (27/03/2019)

``அது அண்ணா தி.மு.க இல்லை, அடிமை தி.மு.க" - விளாசும் உதயநிதி ஸ்டாலின்..!

``அது அண்ணா தி.மு.க இல்லை. அடிமை தி.மு.க'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில்  ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர் நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோரை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ``பி.ஜே.பி வெற்றி பெறுவதற்கு முன்பு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறியிருந்தனர். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றை அறிமுகப்படுத்தி வேலையில் இருந்தவர்கள் கூட தற்போது தெருக்கோடிக்கு வந்துவிட்டனர். நம்மை வைத்துச் செய்த மோடியை, நாம் வைத்துச் செய்ய வேண்டும்.

அ.தி.மு.க-வில் அணிகள் பிரிந்திருந்தபோது ஓ.பி.எஸ் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தர்மயுத்தம் செய்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் எல்லாம் அமைத்தார். ஆனால், சில மாதங்களிலேயே அவர் எடப்பாடியுடன் இணைந்து விட்டார். ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, முதல்வராக இருந்தவர்  ஓ.பி.எஸ்தான். நடந்த அனைத்து சம்பவங்களிலும் இவருக்கும் பங்கு இருக்கிறது. அதனால்தான், அவர் அமைத்த விசாரணை ஆணையத்தில் அவரே சாட்சி சொல்லாமல் இருக்கிறார். இது அண்ணா தி.மு.க இல்லை. அடிமை தி.மு.க" என்றார்.