தூத்துக்குடியில் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி! - ஹரி நாடார் உட்பட 8 பேர் கைது! | Gun seized in a car in thoothukudi 8 persons arrest including hari nadar

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (26/03/2019)

கடைசி தொடர்பு:21:50 (26/03/2019)

தூத்துக்குடியில் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி! - ஹரி நாடார் உட்பட 8 பேர் கைது!

தூத்துக்குடியில் காரில் எடுத்து வரப்பட்ட துப்பாக்கியை வாகனச்சோதனையின்போது தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, ஹரி நாடார் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

திருநெல்வேலியில் நடைபெற்ற கராத்தே செல்வினின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை வரவேற்க இரண்டு கார்களில் வந்த அவரது ஆதரவாளர்கள் 7 பேர் ஹரிநாடாரை வரவேற்று காரில் அழைத்துச் சென்றனர். தூத்துக்குடி டு நெல்லை சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் கார் சென்றபோது தேர்தல் பறக்கும்படை தாசில்தார் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் இரண்டு கார்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், ஒரு காரில் ஒரு ரிவால்வர் மற்றும் 34 தோட்டாக்கள் மற்றும் 15 காலித் தோட்டா உறைகள் இருப்பது தெரியவந்தது. ஹரிநாடாருடன் பாதுகாப்புக்காக வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான நரேந்திரசிங் யாதவ் என்பவருடையது என்பது விசாரணையில் தெரியவந்தது. தற்போது தேர்தல் விதி அமலில் உள்ளது. எனவே, துப்பாக்கி எடுத்துவரவும், வைத்திருக்கவும் அனுமதி இல்லை என்பதால் அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் கார்களைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை விசாரணைக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர்.

``ஹரிநாடாருடன் பாதுகாப்புக்கு வந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வைத்திருந்த துப்பாக்கிக்கான உரிமம் பெங்களூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், கர்நாடகா மாநில எல்லைக்குள் மட்டுமே இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்த முடியும். மேலும், தனது பாதுகாப்புக்கு எனச் சொல்லிப் பெறப்பட்ட துப்பாக்கியை இன்னொரு நபரின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவது குற்றம்” என்றனர் போலீஸார். புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஹரிநாடாரிடம் விசாரணை நடத்திய பின்னர், ஹரிநாடார் மற்றும் அவரது பாதுகாப்புக்காக வந்த ராணுவவீரர் நரேந்திரசிங் யாதவ், சதீஷ்குமார், சதீஸ், விக்னேஷ் கார்த்திக், பாபு, சோலைக்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், காரில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க