`தொகுதி பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும்!' - நீலகிரி அ.ம.மு.க வேட்பாளர் ராமசாமி | AMMK nigiris constituency candidate filed nomination

வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:27 (27/03/2019)

`தொகுதி பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும்!' - நீலகிரி அ.ம.மு.க வேட்பாளர் ராமசாமி

நாடாளுமன்றத் தேர்தலில், நீலகிரி தனித் தாெகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்  போட்டியிட முன்னாள் ஐ.ஏ.எஸ்., ராமசாமி இன்று மதியம் ஏ.டி.சி சந்திப்பிலிருந்து கட்சித் தாெண்டர்களுடன் பிரசார வாகனத்தில் பேரணியாக ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்பாளர் ராமசாமி

பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது, ``நீலகிரி எனக்குப் புதிதல்ல, நான் அரசுப் பணியில் இருக்கும்போது நீலகிரியில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். இந்தத் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகள் என்ன என்று இங்கு களம் காணும் வேட்பாளர்களைவிட எனக்கு அதிகம் தெரியும். தி.மு.க.சார்பில் போட்டியிடும் ஆ.ராசா மீது வழக்கு நிலுவையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர் சிறைக்குச் செல்வார். அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் தியாகராஜனுக்குத் தொகுதி எந்தப் பக்கம் இருக்கிறது என்றே தெரியாது. பிறகு எப்படி தொகுதி பிரச்னைகள் தெரியும்.

இந்தத் தேர்தலில் எங்களுக்கு மக்களின் முழு  ஆதரவு உள்ளது. நாங்கள் வெற்றி பெற்று அண்ணன் டி.டி.வி காலில் வெற்றிக் கனியை   காணிக்கையாக சமர்ப்பிப்போம். நீலகிரி தொகுதியில் தேயிலை பிரச்னை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது, அதேபோல் மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படாமல் உள்ளது. கூடலூர் செக்சன் 17 நிலப் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. நாங்கள் வெற்றி பெற்று இவை அனைத்துக்கும் உரிய தீர்வு காண்போம்'' என்றார்.