தஞ்சை சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளரின் ஒரு மனு நிராகரிப்பு! | Thanjavur ammk candidate nomination rejected

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (26/03/2019)

கடைசி தொடர்பு:21:15 (26/03/2019)

தஞ்சை சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளரின் ஒரு மனு நிராகரிப்பு!

தஞ்சாவூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளரான ரெங்கசாமி மனுத் தாக்கல் செய்தார். இவருடைய கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்ட ஆர்.டி.ஓ சுரேஷ் மனுத் தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது எனக் கூறி சுயேச்சை மனுவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து விட்டார். இது அ.ம.மு.க-வினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேட்பாளர்

தஞ்சாவூரில்  அ.ம.மு.க சார்பில் தஞ்சை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல் செய்தனர். முதலில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பளாரான முருகேசன் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அண்ணாதுரையிடம் 1.30 மணியளில் மனுத் தாக்கல் செய்தார். இவர் அ.ம.மு.க. சார்பில் ஒரு மனுவும், சுயேச்சை வேட்பாளராக ஒரு மனுவும் தாக்கல் செய்தார். இதேபோல் சட்டமன்ற தொகுதி வேட்பாளரான ரெங்கசாமி 2.30 மணிக்கு ஆர்.டி.ஓ. அலுவகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நிர்வாகிகளுடன் வந்தார். பின்னர் அ.ம.மு.க சார்பில் போட்டியிட ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். ரெங்கசாமி கொடுத்த இரண்டாவது வேட்பு மனுவில்  ஆவணங்கள்முறையாக இல்லை என ஆர்.டி.ஓ. சுரேஷ் தெரிவித்ததோடு முழுமையாக பூர்த்தி செய்து எடுத்து வரும்படி அனுப்பி வைத்தார்.

வேட்பாளர்

இதையடுத்து அவரது கட்சியினர் மனுவை மீண்டும் சரி செய்து கொடுப்பதற்கு வந்தனர். அதற்குள் மணி  2.45 ஆகிவிட்டது.  இதற்கிடையில் ஐந்துக்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய வந்தனர். முன்னதாக அ.ம.மு.க-வின் மாற்று வேட்பாளரான ராஜேஷ்வரன் மனுத் தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி 3 மணிக்குள் மனுத் தாக்கல் நேரம் முடிகிறது என்பதால் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டனர். பின்னர்  ஒவ்வொருவராக மனுத் தாக்கல் செய்தனர். அ.ம.மு.க வேட்பாளர் ரெங்கசாமிக்கு 10-ம் நம்பர் டோக்கன் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வேட்பாளாருக்குப் பதிலாக அவர் கட்சியைச் சேர்ந்த விருத்தச்சலம் ஆர்.டி.ஓ. அறையில் அமர்ந்திருந்தார். கடைசி டோக்கன் என்பதால், அவர் எதையும் அதிகாரிகளிடம் கேட்காமலேயே இருந்து விட்டார். சுயேச்சை வேட்பாளர்கள் எல்லாம் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டுச் சென்ற நிலையில், அ.ம.மு.க. வேட்பாளரை அழைத்தார் ஆர்.டி.ஓ. சுரேஷ், ``நீங்க யார்; உங்க பெயர் என்ன'' என கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் தன் பெயரைச் சொல்ல, ``வேட்பு மனுவில் ரெங்கசாமி என்று இருக்கிறது. ஆனால், நீங்கள் இருக்கிறீர்கள் வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிபவரோ இருந்திருக்க வேண்டும் நேரமும் முடிந்து விட்டது அதனால் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என நிராகரித்து விட்டார். இதை அறிந்த வேட்பாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் ஆர்.டி.ஓ விடம் முறையிடச் சென்றனர். ஆனால், பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர் அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து அ.ம.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சுயேச்சையாக தாக்கல் செய்ய இருந்த இரண்டாவது மனு நிராகரிப்பட்டது அ.ம.மு.க-வினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதைத் தொடர்ந்து அ.ம.மு.க-வின் தலைமைக் கழக பேச்சாளர் நல்லதுரை கூறியதாவது, ``ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டிய தேர்தல் அப்படி நடப்பதாக தெரியவில்லை. போலீஸாரைக் கொண்டு வேட்பாளர்களை  அடக்குமுறையாக நடத்துகின்றனர் அதிகாரிகள் . ஒரு மனுவை ஏற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ நேரம் முடிந்துவிட்டது எனக் கூறி வாங்க மறுத்து நிராகரித்து விட்டார். இதை கண்டித்து போராட்டம் நடத்த இருக்கிறோம்''  என்றார்.

தமிழகம் முழுக்கவும் அ.ம.மு.க வேட்பாளர்கள் அ.ம.மு.க சார்பிலும், சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேளை பொதுச் சின்னம் கிடைக்காமல் அ.ம.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தால் ரெங்கசாமி போட்டியிடுவது கேள்விக் குறியாகும் என விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க