விருதுநகரில் 39 பேர், சாத்தூரில் 34 பேர் வேட்பு மனுத்தாக்கல்! | 39 candidates files nomination in virudhunagar constituency

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (26/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (26/03/2019)

விருதுநகரில் 39 பேர், சாத்தூரில் 34 பேர் வேட்பு மனுத்தாக்கல்!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 39 பேரும், சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட 34 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 18-ம் தேதி தொடங்கி இன்று (மார்ச் 26) வரை நடைபெற்றது. தினமும் காலை முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு நாள்கள் யாரும் வரவில்லை. 3-ம் நாளில் இருந்துதான் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யத் தொடங்கினர். நேற்று வரை 11 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், மனுத்தாக்கலின் இறுதி நாள் என்பதால் பலரும் இன்று மனுத்தாக்கல் செய்வதற்காக அவசர அவசரமாக ஆட்சியர் அலுவலகத்துக்கு ஓடி வந்தனர். மதியம் 3 மணிக்குள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வேட்பாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டு அவர்கள் டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டனர். 3 மணிக்கு மேல் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதன்படி, இன்று ஒரே நாளில் மட்டும் 26 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

அழகர்சாமி

தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி சார்பில் 3, அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க சார்பில் 5, அ.ம.மு.க சார்பில் 2, நாம் தமிழர் கட்சி சார்பில் 4 மனுக்கள் என மொத்தம் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர், தே.மு.தி.க சார்பில் அழகர்சாமி, அ.ம.மு.க சார்பில் பரமசிவ அய்யப்பன், நாம் தமிழர் கட்சி சார்பில் அருள்மொழித்தேவன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முனியசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பரமசிவஅய்யப்பன்

அதேபோல சாத்தூரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 34 வேட்பாளர்கள் 46 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. வேட்பாளராக ஸ்ரீனிவாசன், அ.தி.மு.க வேட்பாளராக ராஜவர்மன், அ.ம.மு.க வேட்பாளராக சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.