`திராவிடக் கட்சிகளில் பயணித்தவர்!’ - முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் காலமானார் | Farmer minister N.selvaraj passed away at trichy

வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (26/03/2019)

கடைசி தொடர்பு:22:11 (26/03/2019)

`திராவிடக் கட்சிகளில் பயணித்தவர்!’ - முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் காலமானார்

யாருடைய செல்போன் எண்ணையும் தனது செல்போனின் பதிந்துவைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லாதவர் முன்னாள் அமைச்சர் செல்வராஜ். ஒருமுறை ஒருவரது எண்ணைக் கேட்டுவிட்டால், அதை அப்படியே மனனம் செய்துவைத்துக் கொண்டு அந்த எண்ணிலிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் அந்த நபரின் பெயரைச் சரியாகச் சொல்லும் நினைவாற்றல் மிக்கவர் அவர்.

முன்னாள் அமைச்சர் செல்வராஜ்

பொறியாளரான முன்னாள் அமைச்சர் செல்வராஜுக்கு பெரம்பலூர் அருகில்  உள்ள துறைமங்கலம்தான் சொந்த ஊர். அவருக்கு கருணைராஜா, கலைராஜ் என இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகன்கள் இருவரும் மருத்துவராக உள்ளனர். திருச்சி தி.மு.க-வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய  முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் மறைவுக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அடையாளம் காணப்பட்ட செல்வராஜ், கடந்த 1987- ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தார். அப்போது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி வந்த நிலையில் செல்வராஜ் வேட்பாளராகி கடந்த 1980 ஆண்டு எம்.பி-யாகத் தேர்தெடுக்கப்பட்டார். 

ஜெயலலிதாவுடன்

பொதுவாக முத்தரையர் சமூகத்துக்கு அ.தி.மு.க-வில் அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதும், அதனால் அந்தச் சமூகம் காலங்காலமாக அ.தி.மு.க-வுக்கு வாக்கு வங்கியாக இருந்த நிலையில், அதே சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவே, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத் தி.மு.க-வின் செயலாளராகவும் தி.மு.க எம்.பி-யாகவும் இருந்த செல்வராஜ், தி.மு.க-விலிருந்து பிரிந்து வைகோ ம.தி.மு.க கட்சியை ஆரம்பித்தபோது அவருடன் சென்றார். செல்வராஜுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.

செல்வராஜ்

ம.தி.மு.க-வில் இணைந்த செல்வராஜ், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார். அதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கி முன்னாள் அமைச்சர் பூனாட்சியைத் தோற்கடித்து, வெற்றி பெற்றதால் அப்போதைய தி.மு.க அமைச்சரவையில் வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த செல்வராஜ், தி.மு.க கோஷ்டி அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாமல், கடந்த 2016  சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

அதன் பிறகு, நடந்த அரசியல் மாற்றங்களால் சில காலம் அமைதியாக செல்வராஜ் இருந்து வந்த நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், அ.தி.மு.க-வில் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால், போன வேகத்தில் அவரின் மகன் கருணை ராஜா உள்ளிட்டோர், மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் நேரு தலைமையில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர். கடந்தவாரம் பெரம்பலூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த செல்வராஜை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக அவர் உடல்நிலைப் பாதிக்கப்பட்டு, ஞாபக ஆற்றல் மெல்ல மெல்லக் குறைந்தது. தொடர்ந்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் இன்று மாலை காலமானார். அவரின் மறைவு திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.