`பணம் இருப்பவர்களுக்கே கட்சியில் மரியாதை!’ - மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய திருப்பூர் பொறுப்பாளர் | Makkal neethi maiyam party Tiruppur in-charge resigns from party

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (27/03/2019)

கடைசி தொடர்பு:10:29 (27/03/2019)

`பணம் இருப்பவர்களுக்கே கட்சியில் மரியாதை!’ - மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய திருப்பூர் பொறுப்பாளர்

மக்கள் நீதி மய்யத்தில் பொறுப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததால் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அறிவித்திருக்கிறார்.

வெங்கடேஷ்

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக வெங்கடேஷ் என்பவர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், இன்றைய தினம் செய்தியாளர்களை நேரில் சந்தித்த அவர், மக்கள் நீதி மய்யத்தில் தனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கியதிலிருந்தே கட்சிக்காகப் பல பணிகளையும், பல லட்சம் பணத்தையும் செலவழித்திருக்கிறேன்.

ஆனால், கட்சியில் எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பணம் இருப்பவர்கள் மட்டுமே கட்சியில் மதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மக்கள் நீதி மய்யத்தில் பணியாற்றாத, முன்பின் அறிமுகமில்லாத நபர்களுக்கே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட்டும் வழங்கியிருக்கிறார்கள். மாவட்டத்தில் யாருக்கு சீட் வழங்கலாம் என்பதைப் பற்றிக்கூட மாவட்ட பொறுப்பாளர்களாகிய எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் கமல்ஹாசனின் சினிமா நண்பர்களே கட்சியை வழி நடத்துகிறார்கள். இந்தத் தலைமையின் மீது அதிருப்தி இருப்பதால் மக்கள் நீதி மய்யத்தில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து விலகுகிறேன். அத்துடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றிக்காக உழைக்கவும் போகிறேன் எனத் தெரிவித்தார்.