"அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயம் தேடுகின்றனர்" - கோவை சிறுமியின் பெற்றோர் வேதனை | Coimbatore Child murder Parents Upset on political parties

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (27/03/2019)

கடைசி தொடர்பு:07:50 (27/03/2019)

"அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயம் தேடுகின்றனர்" - கோவை சிறுமியின் பெற்றோர் வேதனை

கோவையில், சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசியல் கட்சிகள் தேர்தலை மையமாகவைத்து அணுகுவதாகப் பெற்றோர் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

சிறுமி பெற்றோர்

கோவை பன்னீர் மடையில், பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பிய ஒன்றாம் வகுப்பு சிறுமி , பிறகு விளையாடச் சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். விடிய விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையைத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட காயங்களோடு பள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.  உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது, குற்றவாளிகளைப் பிடிக்க தாமதிப்பதைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கக் கோரியும், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் உடன்படாத சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், எம்.எல்.ஏ-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், எம்.எல்.ஏ ஆறுக்குட்டி அங்கிருந்து சென்றார். 

ஆறுக்குட்டி

இதையடுத்து, கோவை பாராளுமன்றத் தொகுதி பி.ஜே.பி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன், கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவரும், உடலை வாங்க மறுத்துவரும் சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்களால் சமாதானம் அடைய முடியவில்லை. மேலும், தேர்தல் நடைபெறுவதால்தான் அரசியல் கட்சியினர் விரைந்துவந்து எங்களைச் சந்திக்கின்றனர். எங்கள் மகளின் மரணத்துக்கு முன்பே, இதுபோன்ற அரக்கர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், இந்நேரம் நாங்கள் எங்கள் மகளை இழந்திருக்க மாட்டோம். தற்போது, எங்களது மகளின் மரணத்தைப் பயன்படுத்தி அனுதாப வாக்குகளைச் சேகரிக்க அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டிவருகின்றன என்று சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர்.