‘பட்டுவாடா பணத்தை அமுக்கிய அ.தி.மு.க-வினர்?’ - வீடுபுகுந்து தாக்கிய கிராம மக்கள் | Lok sabha election 2019 - Fight Between Villagers and ADMK Followers in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (27/03/2019)

கடைசி தொடர்பு:10:29 (27/03/2019)

‘பட்டுவாடா பணத்தை அமுக்கிய அ.தி.மு.க-வினர்?’ - வீடுபுகுந்து தாக்கிய கிராம மக்கள்

முதல்வரின் பிரசார நிகழ்ச்சிக்குப் பணம் கொடுப்பதாக அழைத்துச்சென்று ஏமாற்றிய அ.தி.மு.க-வினரை, கிராம மக்கள் வீடுபுகுந்து அடித்து உதைத்தனர். பணப் பட்டுவாடா புகாரில், அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் அமைச்சர் கே.சி.வீரமணி பெயர்கள் அடிபடுகின்றன.

ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்செல்வம் பிரசாரம்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் கஸ்பா மூர்த்தியை ஆதரித்து, கடந்த 23-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரணாம்பட்டில் பிரசாரம் செய்தார். அப்போது, அதிக அளவில் கூட்டம் சேர்ப்பதற்காகத் தலைக்கு 200 ரூபாய் தருவதாகக் கூறி பல்வேறு கிராமங்களிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை அ.தி.மு.க-வினர் அழைத்துவந்தனர். அவர்களுக்கு, பேரணாம்பட்டு நகரச் செயலாளர் சீனிவாசன் பெயர் எழுதப்பட்டிருந்த ‘சீல்’ போட்ட டோக்கன் வழங்கப்பட்டது. முதல்வரின் பிரசாரத்துக்குப் பிறகு, டோக்கன் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு அ.தி.மு.க-வினர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், முதல்வரின் பிரசார நிகழ்ச்சி முடிந்து, மறுநாள் ஆகியும் டோக்கன் கொடுத்தவர்களுக்கு பணம் போய்ச் சேரவில்லை. 

பணப்பட்டுவாடா புகார்

அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பிலிருந்து வழங்கப்பட்ட பணத்தை நகரச் செயலாளர் சீனிவாசன் உட்பட, மேலும் சில அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கிட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த,  பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்த சம்ஷீனா, அவரின் மகன் தாஜூன் மற்றும் கிராம மக்கள், அதே பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் அப்துல்காதரின் மைத்துனர் நியாஸ் வீட்டுக்கு டோக்கனுடன் சென்றனர். பணம் தராமல் ஏமாற்றியதால், அங்கிருந்த அ.தி.மு.க-வினரை வீடுபுகுந்து அடித்து உதைத்தனர். அ.தி.மு.க-வினரும் பதிலுக்குத் தாக்கினர். இதுதொடர்பாக, இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், பேரணாம்பட்டு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் மௌனமாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.