'கஞ்சா அரக்கர்கள் காரணமா?' - கோவை சிறுமி கொலை வழக்கில் தனிப்படை விசாரணை | Shocking information about Coimbatore Child murder case

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (27/03/2019)

கடைசி தொடர்பு:11:42 (27/03/2019)

'கஞ்சா அரக்கர்கள் காரணமா?' - கோவை சிறுமி கொலை வழக்கில் தனிப்படை விசாரணை

கோவையில், சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல்கட்டமாக, போலீஸார் இரண்டு பேரை கைதுசெய்திருக்கிறார்கள்.

கோவை துடியலூர் அருகே துப்புரவுப் பணியாளர் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், முதல் மகள் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று முன்தினம், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி,  நேற்று அதிகாலை ரத்தக் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வசந்த் மற்றும் விஜயகுமார் என்ற இருவரைக்  கைதுசெய்து போலீஸார்  விசாரணை செய்துவருகின்றனர்.

விசாரணையின் முதல்கட்டமாக, குழந்தையின் வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள முட்புதருக்குள் 5 பேர் கஞ்சா அடித்துவிட்டு குழந்தையை வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், போலீஸ் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலை வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டம்

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மணி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.