தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு: கடமையைச் செய்யாத போலீஸுக்கு நான்காண்டுச் சிறை! | Dinakaran's office burn case four-year prison for police

வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (27/03/2019)

கடைசி தொடர்பு:11:51 (27/03/2019)

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு: கடமையைச் செய்யாத போலீஸுக்கு நான்காண்டுச் சிறை!

குற்றவாளிகளுக்குத் துணைபோகும் அதிகாரிகளுக்கு இந்த வழக்கு ஒரு பாடம் என்கிறார்கள்.

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு: கடமையைச் செய்யாத போலீஸுக்கு நான்காண்டுச் சிறை!

``சம்பவத்தைத் தடுக்க வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்திருந்தால், குறைந்தபட்சம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கலாம். ஆனால், உங்கள் கடமையைச் செய்யவில்லை. அதனால், இந்த நீதிமன்றம் உங்களைக் குற்றவாளியாகக் கருதுகிறது. இதுபற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா’’ என்று நீதிபதிகள் கேட்டபோது, ``எனக்கு 62 வயதாகிறது. பல்வேறு நோய்களால் அவதிப்படுகிறேன். என் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’’ என்று தழுதழுத்த குரலில் ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி ராஜாராம் கூறியபோது பார்ப்பவர்களுக்கு வருத்தமாகத்தான்  இருந்தது. ஆனால், அவர் செய்த குற்றம் சாதாரணமானது அல்ல... மூன்று அப்பாவி ஊழியர்கள் கொல்லப்படுவதற்கு ஒருவகையில் தெரிந்தே காரணமாக இருந்தவர். தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து. கடந்த 21-ம் தேதி தீர்ப்பு வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை, 17-வது குற்றவாளியான ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி ராஜாராமுக்கு அன்று தண்டனை அறிவிக்கவில்லை. கடந்த 25-ம் தேதி ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி.ராஜாராமை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு,  தண்டனை விதிப்பதற்கு முன்பு நீதிபதிக்கும் ராஜாராமுக்கும் நடந்த உரையாடல்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன.

தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் ராஜாராம்

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ராஜாராமுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனையைப் பார்த்து ஆளும் கட்சிக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் ஆதரவாக நடந்துகொண்டு அநியாயத்துக்குத் துணைபோகும் அதிகாரிகள் இனியாவது திருந்த வேண்டும், அவர் யாருக்காக இப்படி நடந்துகொண்டாரோ, அவர்கள் யாரும் இவரைக் காப்பாற்றவில்லை என்பதையும் அதிகாரிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பேசத் தொடங்கியுள்ளார்கள்.

கடந்த 2007-ம் ஆண்டு மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் நடந்தபோது அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர் அப்போது ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி-யாக இருந்த ராஜாராம். இந்த வழக்கு போலீஸிலிருந்து சி.பி.ஐ-க்கு உடனே மாற்றப்பட்டதும் டி.எஸ்.பி ராஜாராம் 17-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அனைவரையும் இரண்டு வருடத்தில் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதில்  டி.எஸ்.பி ராஜாராமும் ஒருவர். இந்த வழக்கை சி.பி.ஐ. 2011-ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு  செய்ததால், மீண்டும் விசாரணை நடந்தது. நீண்டகால விசாரணைக்குப் பின் கடந்த 21-ம் தேதி தீர்ப்பளித்தது. 17 பேரில் அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தது. 6 பேரைக் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை உறுதிப்படுத்தியது. கீழமை நீதிமன்றம் விடுவித்திருந்த 17-வது குற்றவாளியான போலீஸ் அதிகாரி ராஜாராம் 25-ம் தீதி ஆஜரானபோது அவருக்கு நான்காண்டுச் சிறைத்தண்டனை என தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

மதுரை உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பு அளிப்பதற்கு முன் போலீஸ் அதிகாரி ராஜாராமிடம், ``சம்பவம் நடந்த இடத்தில் உங்கள் குழந்தைகள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்’’ என்று நீதிபதிகள் கேட்டபோது, ``சம்பவம் நடந்த இடத்தில் நான் இல்லை. இருந்திருந்தால் நிச்சயம் தடுக்க முயன்றிருப்பேன்’’ என்றார். ``சம்பவம் நடந்த இடத்தில் நீங்கள் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. சம்பவத்தைத் தடுக்க வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் நினைத்திருந்தால் குறைந்தபட்சம் வானத்தை நோக்கியாவது சுட்டிருக்கலாம். உங்கள் கடமையைச் செய்யவில்லை. அதனால், இந்த நீதிமன்றம் உங்களைக் குற்றவாளியாகக் கருதுகிறது’’ என்று நீதிபதிகள் கூறியபோது அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. இ.பி.கோ. 217 பிரிவின்கீழ் ஓராண்டும், 221 பிரிவின்படி நான்கு ஆண்டுகளும் இவை இரண்டையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதால் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 

குற்றவாளிகளுக்குத் துணைபோகும் அதிகாரிகளுக்கு இந்த வழக்கு ஒரு பாடம் என்கிறார்கள். நம் அதிகாரிகள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்களா என்று பார்ப்போம். 
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்