`கொள்ளையடித்ததும் கோவாவுக்கு ஃபிளைட்டில் பறந்தோம்!’ - போலீஸ்போல் நடித்தவர்கள் வாக்குமூலம்  | Robbery Two Arrested in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (27/03/2019)

கடைசி தொடர்பு:12:25 (27/03/2019)

`கொள்ளையடித்ததும் கோவாவுக்கு ஃபிளைட்டில் பறந்தோம்!’ - போலீஸ்போல் நடித்தவர்கள் வாக்குமூலம் 

போலீஸ் எனக்கூறி வழிப்பறி

சென்னையில் போலீஸ் என நடித்து நிதிநிறுவன ஊழியரிடம் 98 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்ததும் விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவாவுக்குச் சென்றுவிட்டதாகக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

சென்னை ஏழுகிணறு பெரியண்ணன் தெருவில் நிதிநிறுவனம் செயல்பட்டுவருகிறது. அங்கு கோபிநாத் என்பவர் பணியாற்றிவருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், நிதிநிறுவனத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு திருச்சி செல்ல திட்டமிட்டார். பணத்துடன் அரசு பஸ்சில் கோயம்பேடு சென்றார். கெல்லீஸ் பஸ் நிறுத்தத்தில் இரண்டு பேர் ஏறினர். அவர்களின் கையில் போலீஸ் பயன்படுத்தும் கைவிலங்கு இருந்தது. பஸ்சில் ஏறிய அந்த இரண்டுபேரும் போலீஸ் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பயணிகளைச் சோதனை செய்தனர்.

கோபிநாத் வைத்திருந்த பணம் குறித்து விசாரித்தனர். பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் கோபிநாத்தை பஸ்ஸைவிட்டு அவர்கள் கீழே இறக்கினர். இதையடுத்து அங்கு தயாராக இருந்த காரில் கோபிநாத்தை கடத்தினர். காருக்குள் இன்னும் சிலர் இருந்தனர். கெல்லீஸிலிருந்து புறப்பட்ட கார், வண்டலூர் புறவழிச்சாலையில் நிறுத்தப்பட்டது. காருக்குள் இருந்தவர்கள் கோபிநாத்திடம் துருவி துருவி விசாரணை நடந்தது. காரைவிட்டு கோபிநாத்தை கீழே இறக்கிவிட்டனர். பிறகு, அவரிடமிருந்த பணத்தில் 98 லட்சம் ரூபாயை மட்டும் வழிப்பறி செய்துகொண்டு மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை கோபிநாத்திடமே கொடுத்துவிட்டு காரில் தப்பினர். பணத்தைப் பறிகொடுத்த கோபிநாத், நிதிநிறுவன உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார். பிறகு, கீழப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரவீன்குமார், பொன்ராஜ், விநாயகம், வீரக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். முதலில் புகார் கொடுத்த கோபிநாத் மீதே போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், உண்மையிலேயே பணம் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானதும் கீழ்ப்பாக்கம் போலீஸார் தீவிர விசாரணையில் களமிறங்கினர். கோபிநாத், பஸ்சில் ஏறியது முதல் வண்டலூரில் கார் நிறுத்தியது வரை விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது கோபிநாத் பயணித்த பஸ்ஸை பின்தொடர்ந்து கார் ஒன்று வருவதை போலீஸார் கண்டறிந்தனர். அந்தக் காரின் பதிவு நம்பரைக் கொண்டு அடுத்தகட்ட விசாரணையில் போலீஸார் ஈடுபட்டனர். போலீஸாரின் விசாரணையில் பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஜாபர் என்பவர் முதலில் சிக்கினார். அதன் பிறகு, அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்தக் கொள்ளை சம்பவத்தில் மேலும் 7 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களைப் பிடித்த போலீஸார் பணத்தை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கோபிநாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்தபோது திட்டம் போட்டு கொள்ளையர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையடித்த பணத்துடன் அவர்கள் கோவாவுக்கு விமானத்தில் சென்றுள்ளனர். அங்கு பணத்தை செலவழித்து ஜாலியாக இருந்துள்ளனர். அதன் பிறகு சென்னை வந்துள்ளனர். இந்தத் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும் அவர்களைப் பிடிக்க முடிவு செய்தோம். இரண்டாவது தடவையாகக் கோவாவுக்குச் செல்ல கொள்ளையர்கள் விமான நிலையத்துக்கு வந்தனர். அங்கு வைத்து கொள்ளையர்களைக் கைது செய்தோம்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது ஜாபர். மேலும், கூட்டத்துக்குத் தலைவனாக இருந்தது ராமநாதபுரத்தைச் சேர்ந்த களந்தர். இவர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களின் கூட்டாளிகள் சாதிக், வினோத், ராம், ரவிக்குமார், ராஜ்குமார், ராபின் ஆகியோரைக் கைது செய்துள்ளோம். கொள்ளைக் கும்பலிடமிருந்து கார், பைக்குகள், நகைகள் என 60 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்துள்ளோம். மீதமுள்ள பணத்தை செலவழித்துவிட்டதாகக் கொள்ளையர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகிறோம்’’ என்றார். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படையைச் சேர்ந்த போலீஸ் என முதலில் கோபிநாத் நம்பியுள்ளார். அதன் பிறகுதான் அவர்கள் போலீஸ் இல்லை, வழிப்பறி கொள்ளையர்கள் எனக் கோபிநாத்துக்குத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க கோபிநாத் முயற்சி செய்தும் பலனிக்கவில்லை. கொள்ளையர்கள் ஜாபரும் களந்தரும் சேர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். பண புழக்கம் அதிகமாக உள்ளவர்களைக் குறி வைத்து இந்தக் கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டிவந்துள்ளது. ஜாபரும் களந்தரும் பார்ப்பதற்குப் போலீஸ்போல் உள்ளனர். கைவிலங்கை வைத்துக்கொண்டு போலீஸ் என நாடகமாடி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். ஹவாலா மோசடி கும்பலைக் குறி வைத்து இந்தக் கொள்ளைக் கும்பல் செயல்பட்டுள்ளது. கோபிநாத்தை இந்த வழக்கில் சிக்க வைக்கத்தான் அவரிடம் 2 லட்சம் ரூபாயை விட்டுவிட்டு கொள்ளைக் கும்பல் தப்பியுள்ளது. விசாரணையில் இன்னும் புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.