“கட்சியில் பலரும் பணக்காரர்கள்தான்; பிச்சையெடுக்கும் நிலையில் நான் இல்லை”- சொல்கிறார் தீபா | deepa refutes charges against her to loot cadres money

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (27/03/2019)

கடைசி தொடர்பு:13:35 (27/03/2019)

“கட்சியில் பலரும் பணக்காரர்கள்தான்; பிச்சையெடுக்கும் நிலையில் நான் இல்லை”- சொல்கிறார் தீபா

விருப்ப மனுவுக்காக வாங்கிய கட்டணத்தை யாராவது திருப்பித் தருமாறு தன்னை அணுகினால், பணத்தை திருப்பியளிக்கத் தயாராக இருப்பதாக, ஜெ.தீபா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் போட்டியில் இருந்து விலகி, அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பதாக, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா சமீபத்தில் அறிவித்தார். அ.தி.மு.க தலைவர்கள் கேட்டுக்கொள்ளும்பட்சத்தில் பிரசாரத்துக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், விருப்ப மனுவுக்காக வாங்கிய கட்டணத்தைத் திருப்பியளிக்காமல் தீபா ஏமாற்றி வருவதாக அவரது பேரவையில் இருந்து புகைச்சல் கிளம்பியது. இது, தன்னைப் பற்றி சிலர் அவதூறு பரப்புவதற்காகக் கிளப்பிவிட்ட செய்தி என ஜெ.தீபா விளக்கமளித்துள்ளார்.

ஜெ.தீபா

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தீபா, "கடந்த இரண்டு வருடமாக எத்தனையோ மிரட்டல்கள், அவதூறுகளைத் தாண்டி, இந்த இயக்கத்தை என் சொந்தப் பணத்தில்தான் நடத்திவருகிறேன். இதுவரை யாரிடமும் நான் பணம் பெற்றதில்லை. இந்நிலையில், விருப்பமனுவுக்காக செலுத்திய கட்டணத்தை நான் அபகரித்துவிட்டதாகச் சிலர் கூறியதுபோன்று செய்தி வெளிவந்துள்ளது. நான் ஜெயலலிதாவின் மருமகள். பிறந்தது முதல் என்னை செல்வச் செழிப்பில்தான் என் பெற்றோர் வளர்த்தனர். யாரிடமும் 2,000-க்கும் 5000-க்கும் பிச்சை எடுக்கும் நிலையில் நான் இல்லை. 

ஆண்டுதோறும் எங்கள் வீட்டில் ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளைச் சத்தமில்லாமல் வழங்கிவருகிறோம். விருப்பமனு அளித்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளிடம்கூட கட்டணத்தை வசூலிக்கவில்லை. பேரவையில் உள்ள பலரும் பணக்காரர்கள்தான். இங்கு யாரும் பணத்தை எதிர்பார்த்து இல்லை. இந்நிலையில், நான் பணத்தை சுருட்டிவிட்டதாக வரும் செய்தி வருத்தமளிக்கிறது" என்றவரிடம், "நீங்கள் போட்டியிடப் போவதில்லை என ஜனவரி மாதமே தீர்மானம் போட்டுவிட்டதாகக் கூறுகிறீர்கள். பிறகு எதற்காக விருப்பமனு பெற்றீர்கள்?" என்றோம்.

"என்னை, சிலர் தவறாக வழிநடத்திவிட்டனர். இன்றும் பேரவைக்குள் சசிகலாவின் சதிகாரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுத்து நீக்குவதே பெரும்பாடாக இருக்கிறது. நான் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்த பின்னரும்கூட பலர் என்னை மிரட்டினார்கள். அனைத்தையும் எதிர்கொண்டுதான் பேரவையை நடத்திவருகிறேன். மற்ற கட்சிகளும்தான் விருப்பமனுவுக்கு பணம் வாங்குகிறார்கள். அவர்கள் திருப்பிக் கொடுக்கிறார்களா என்ன?" என்றார் ஆவேசமாக.

"அவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். நீங்கள் போட்டியிடவில்லை. நியாயப்படி பணம் கட்டியவர்கள் திருப்பி கேட்கத்தானே செய்வார்கள்?" என்றோம். "ஒருசில தான் இதுபோன்ற அவதூறுகளைக் கிளப்பிவருகிறார்கள். அப்படி பணத்தை எதிர்பார்ப்பவர்கள் தாராளமாக தி.நகர் கட்சி அலுவலகத்துக்கு வந்து என்னை சந்திக்கலாம். கட்டணத் தொகையோடு, பிரியாணி, வழிச்செலவுக்கான பணத்தையும் திருப்பி அளிக்கத் தயார்" என்றார்.

"அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக எப்போது பிரசாரத்தைத் தொடங்குகிறீர்கள்?" என்றோம். "நான்கு இடங்களைத் தேர்வுசெய்துள்ளோம். விரைவில் அறிவிப்பு வரும்'' என்று முடித்துக்கொண்டார். 

முன்னதாக, தீபா பேரவை சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஆண்களுக்கு 5000, பெண்களுக்கு 2000 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டது. சுமார் 160 பேரிடம் வசூலிக்கப்பட்ட தொகை 7 லட்சத்தைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது. தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த தீபா, தாங்கள் கட்டிய பணத்தை மட்டும் திருப்பி அளிக்க மறுப்பதாகப் பேரவையில் உள்ள சில நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். தற்போது, தீபாவின் அறிவிப்பைத் தொடர்ந்து, விருப்ப மனுவுக்காக கட்டணம் செலுத்தியவர்கள், பணத்தைத் திரும்பப் பெற தி.நகர் கட்சி அலுவலகத்தை நோக்கிப் படையெடுப்பார்களா... பதுங்குவார்களா? என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.