`ஆளுக்கு 50 சென்ட் நிலம் வாங்கிக் கொடுப்போம்!’ - நீலகிரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வாக்குறுதி | MNM candidate nominates in nilgiris

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (27/03/2019)

கடைசி தொடர்பு:09:31 (28/03/2019)

`ஆளுக்கு 50 சென்ட் நிலம் வாங்கிக் கொடுப்போம்!’ - நீலகிரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வாக்குறுதி

நீலகிரி தனித் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை என மொத்தம் 15  பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். நீலகிரி தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிட உள்ளது.

நீலகிரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சி எனப் பலமுனை போட்டிகள் நிலவுகிறது. நீலகிரித் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வழக்கறிஞர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேட்புமனுத்தாக்கலுக்குக் கடைசி நாளான நேற்று காலையே கட்சித் தொண்டர்களுடன் ஊட்டி ஏ.டி.சி சந்திப்பிலிருந்து ஊர்வலமாக வந்தனர். வேட்புமனுத்தாக்கல் செய்யும் முன்பு ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற்றதில் ஆவணங்கள் முறையாக இல்லாததைக் கண்டு தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். பின்னர், இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பிறகு வேட்பு மனு ஆவணங்களை முறையாகப் பூர்த்தி செய்து இணைத்து சரி பார்க்கப்பட்ட பிறகு, தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 
தாெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ம.நீ.ம வேட்பாளர் ராஜேந்திரன், ‛‛நான் ஒரு வழக்கறிஞர். சமூக சேவைக்காகவே மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தேன்.

வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நீலகிரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

எங்கள் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் சொல்வதுபோல நாங்கள் பல்லக்கில் ஏற விரும்புவதில்லை. பல்லக்கைத் தூக்க விரும்புகிறோம். கமல்ஹாசன் நடிப்பில் மட்டும் டாப் இல்லை, அரசியலிலும் அவர் டாப். வேட்பாளர்களை செலக்ட் பண்ணவில்லை, உண்மையான சமூக சேவை செய்வோரை கேட்ச் செய்கிறார். நீலகிரியில் உள்ள அரசு நிலங்களைத் தனியார் தேயிலைத்தோட்டங்கள் ஆக்கிரமித்துள்ளன என உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். அதில் 22 தேயிலைத் தோட்டங்கள் ஆக்கிரமித்துள்ளன. பல மிகப்பெரிய நிறுவனங்களும் அடங்கும்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விசாரணை செய்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்களை அளந்து, கணக்கிட்டுச் சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. இந்த நிலத்தை மீட்டு 20  ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி புரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவோம். விவசாயம் செய்யக்கூடிய அரசு நிலங்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த நிலமும் மக்களுக்குப் போய் சேர நடவடிக்கை எடுப்போம். இரண்டு லட்சம் தொழிலாளர்களுக்கு ஆளுக்கு 50 சென்ட் நிலம் வாங்கிக் கொடுப்போம்’’ என்றார்.