`எங்களுக்கு 4பேர் மீதுதான் சந்தேகம் உள்ளது!'- கலெக்டரிடம் துடியலூர் சிறுமியின் பெற்றோர்கண்ணீர் | Coimbatore child murder case: parents met collector

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (27/03/2019)

கடைசி தொடர்பு:14:10 (27/03/2019)

`எங்களுக்கு 4பேர் மீதுதான் சந்தேகம் உள்ளது!'- கலெக்டரிடம் துடியலூர் சிறுமியின் பெற்றோர்கண்ணீர்

கோவை சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கலெக்டரிடம் துடியலூர் சிறுமியின் பெற்றோர் புகார்

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிர்ச்சியே அடங்கவில்லை. அதற்குள் அடுத்த பேரதிர்ச்சி கோவையை தாக்கியுள்ளது. பள்ளிக்கு சென்று வீடு திரும்பி, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர்தான், கஞ்சா அடித்துவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, விஜயகுமார் மற்றும் வசந்த் என்ற இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி-யிடம் கோரிக்கை வைத்தனர்.

அப்போது, "சிரித்த முகத்துடன் பள்ளிக்கு சென்ற குழந்தையை அடுத்த நாள் காலை சடலமாகத்தான் பார்த்தோம். எங்கள் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. எங்களுக்கு 4 பேர் மீதுதான் சந்தேகம் உள்ளது. அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, "நீங்கள் சந்தேகப்பட்டவர்களை பிடித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக நான் போலீஸ் எஸ்.பி-யிடம் பேசியுள்ளேன். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக, நீங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்" என்றார் 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.