`குடும்பத்தைப் பிரிக்கிறார்; டார்ச்சர் செய்கிறார்!'- போலீஸ் ஏட்டு மீது எகிறவைக்கும் புகார்கள் | Complaint Against Chennai Police Head Constable

வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (27/03/2019)

கடைசி தொடர்பு:14:48 (27/03/2019)

`குடும்பத்தைப் பிரிக்கிறார்; டார்ச்சர் செய்கிறார்!'- போலீஸ் ஏட்டு மீது எகிறவைக்கும் புகார்கள்

சென்னை ராயபுரத்தில் பணியாற்றிவரும் போக்குவரத்து தலைமைக் காவலர் கலைமணி மீது, சக காவலர்களே பரபரப்புப் புகார் ஒன்றைக் கூறியிருக்கின்றனர்.

ராயபுரம் காவல் நிலையம்

வடசென்னையில் உள்ள ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காலவராகப் பணியாற்றிவருபவர் கலைமணி. இவர், சக காவலர்களுக்கு மிகுந்த மனஉளைச்சல் கொடுத்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட காவலர்கள் கூறுகையில், "ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் கலைமணியின் அராஜகமும் அதிகாரப்போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இவரிடம், போலீஸார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் விடுமுறையோ, அனுமதி விடுப்போ அல்லது அவசரகால அனுமதியோ கேட்டால், எதற்கும் செவிசாய்க்காமல் தேவையற்ற காரணங்களைக் கூறி மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவார். இன்ஸ்பெக்டர் எந்த விடுப்பாக இருந்தாலும் அடுத்த விநாடியே கொடுக்கச் சொல்லிவிடுவார். அதைப் பொருட்படுத்தாமல், தலைமைக் காவலர் கலைமணி, வேண்டுமென்றே பணியில் உள்ள காவலர்களை அலைக்கழிப்பார். பின்னர், வார நாள்களில் அனுமதி விடுப்பு கிடையாது என்று கூறி தற்செயல் விடுப்பில் கழித்துவிடுவார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, அவரின் அராஜக செயல் எல்லை மீறிபோய்விட்டது. பலமுறை ஆய்வாளர் கண்ணனிடம் முறையிட்டும் கலைமணியை எழுத்தர் பதவியில் இருந்து மாற்றாததே புரியாத புதிராக இருக்கிறது.


1997-ம் ஆண்டு, காவல்துறை பணியில் சேர்ந்த கலைமணி, புதுப்பேட்டை ஆயுதப்படையில் எழுத்தராகப் பணியாற்றினார். அப்போது, அங்கேயும் பல காவலர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். பின்னர், அங்கிருந்து மாற்றப்பட்டு பொதுப்பணியைப் பார்த்து வந்தார். பிறகு,  ஹெச்5 போக்குவரத்து காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட கலைமணி, அங்கேயும் பல காவலர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்துள்ளார். ஒரு காவலரின் குடும்பச் சூழ்நிலையை கலைமணி தெரிந்துகொண்டு, அந்தக் குடும்பத்தில் பல பிரச்னைகளை உண்டுபண்ணி, அக்குடும்பமே பிரிந்து விவாகரத்து வரை சென்றுவிட்டது. பாதிக்கப்பட்ட அந்த காவலர் தற்போது வடசென்னை டிசி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். புது வண்ணாரப்பேட்டை ஹெச்5 போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த கலைமணி, அங்கிருந்து தண்டையார்பேட்டை ஹெச்3 போக்குவரத்து காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் தனது அடாவடி செயலை காட்டியுள்ளார் கலைமணி. "காவலர்கள் அவர் முன்பு அமரக்கூடாது. நின்றுக்கொண்டுதான் பேச வேண்டும். 'நான் ஒரு சீனியர் என் முன் நீ அமருவதா' என்று காவலர்களை வசைபாடியுள்ளார். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவரின் வாகனத்தை திருடிவிட்ட கலைமணி, சம்பந்தப்பட்டவர் தனது வாகனத்தை கேட்கவந்தபோது, இது குறித்து எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். வாகனத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தை நாட இருந்த நிலையில், வழக்கறிஞர் மூலம் சமாதானம் பேசி ரூ.30 ஆயிரம் கொடுத்து தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த அப்போதைய போக்குவரத்து ஆய்வாளராக இருந்த ராஜன், கலைமணியை எழுத்தர் பணியில் இருந்து மாற்றினார். அதன்பிறகு, கலைமணி பொதுப்பணியைப் பார்த்துவந்தார். பின்னர், பணியில் இருந்த கஷ்டங்களை உணர்ந்து, காவல்துறை வாகனங்களை ஓட்டும் பணிக்கு சென்றுவிட்டார். அங்கேயும், சக காவலர்களை மிரட்டுவது, திமிராகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார். பின்னர், அங்கிருந்தும்  மாற்றப்பட்டார். எந்த காவல் நிலையத்திலும் கலைமணி நல்ல பெயரோ, நன்னடத்தையோ எடுத்ததாக இல்லை என்று வடசென்னையில் பணிபுரியும் 80 சதவிகித காவலர்கள் கூறுகின்றனர்.

பணியில் இருப்பதாக கூறி திருமணத்தில் பங்கேற்ற கலைமணி

தற்போது கலைமணி, ராயபுரத்தில் உள்ள என்1 போக்குவரத்து காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்துவருகிறார். கடந்த ஒரு வருடமாக இங்கு பணிபுரிந்துவரும் கலைமணிக்கு சிலர் பயந்து, அவர் கொடுக்கிற டார்ச்சரை சகித்துவருகின்றனர். கேள்வி கேட்கும் காவலர்களுக்கு கடினமாக பணி, முழுநேர பாதுகாப்பு பணி போன்ற பணிகளுக்கு உட்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் விடுப்பு, அனுமதி விடுப்பு ஆகியவை தராதபடி ஆய்வாளர் கண்ணனிடம் போட்டுக்கொடுத்துவிடுகிறார். இவரின் இந்த டார்ச்சரால் பல காவலர்கள் ராயபுரம் காவல் நிலையத்துக்கு வந்து ஒரு வருடம்கூட ஆகாத நிலையில், வேறு காவல் நிலையத்துக்கு மாற்றல் வாங்கிச் சென்றுவிட்டார்கள். தற்போது, இரண்டு காவலர்கள் பணிமாற்றல் கேட்டு சென்றுவிட்டார்கள். இவை அனைத்தும் நிலைய ஆய்வாளர் கண்ணனுக்கு தெரிந்தும், எதுவும் நடக்காதது போல் இருப்பது வேதனை அளிக்கிறது. சீருடை அணியாமல் காவல் நிலையத்துக்கு வரும் கலைமணி, அவருக்கு நேரமெல்லாம் கிடையாது. நினைத்த நேரத்தில் வருவதும் போவதுமாக இருப்பார். தான் காவல் நிலையத்துக்கு வராத நாள்களில், அவருக்கு வேண்டிய காவலர்கள் மூலம் அன்றைய விவரங்களை செல்போன் மூலம் தெரிந்துகொள்வார். அரசாங்கம் வழங்கும் ETR-ஐ தவறாமல் வாங்கிக்கொள்வார்.

பணியில் இருப்பதாகக் கூறி திருமணத்துக்கு சென்ற ரைட்டர் கலைமணி (வட்டமிடப்பட்டுள்ளது)

மேலும், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் வரதன் என்ற காவலரின் திருமணத்துக்காக காவலர்கள் அனைவரும் தற்செயல் விடுப்பில் சென்றனர். ஆனால், கலைமணி மட்டும் ஆன் டூட்டியில் இருப்பதுபோல வருகைப் பதிவேட்டில் பதிவுசெய்துவிட்டு 1,500 கி.மீட்டர் தூரத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயிலுக்குச் சென்றுவந்துள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிபவர்கள், தவிர்க்க முடியாத குடும்பச் சூழ்நிலையில், பணியின்போது அவசர அனுமதி கேட்டால், அவர்களுக்கு ஒருநாள் சி.எல் அல்லது அனுமதி விடுப்புதான் தர முடியும் என்று கூறி மனு பெற்றுக்கொண்டு பதிவுசெய்துவிடுவார். அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இதையெல்லாம் செய்ய மாட்டார். இனிவரும் காலங்களில் கலைமணி மீது உள்ள புகார்கள் ஆதாரத்துடன் வெளியிடுவோம்" என்று வேதனையும் ஆவேசத்துடன் கூறினர். 

சக காவலர்களின் குற்றச்சாட்டுகுறித்து தலைமைக் காவலர் கலைமணியிடம் கேட்டப்போது, "லீவு நான் கொடுப்பது கிடையாது. இன்ஸ்பெக்டர்தான் கொடுப்பார். எனக்கும் லீவு கொடுப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சொல்கிற வேலையைத்தான் செய்வேன். அவரிடம் கேட்டாலே உங்களுக்குத் தெரியும். மற்ற குடும்பப் பிரச்னையில் நான் ஏன் தலையிடப் போகிறேன்? நான் டார்ச்சர் செய்ததாகக் கூறி எந்தக் காவலரும் பணியிடை மாற்றம் கேட்டுப்போகவில்லை. இதற்கு முன்பு இருந்த ரைட்டருக்கு மதுபானம் வாங்கிக்கொடுத்துட்டு டூட்டி பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பலவற்றை அனுபவித்துக்கொண்டிருந்தாங்க. இப்போது நான் கரெக்ட்டா இருக்கிறேன். யார் கிட்டேயும் நான் டீ வாங்கிக் குடித்தது கிடையாது. யாரிடமும் பணம் வாங்கியதும் கிடையாது. வேற வழியில்லாமல் இப்படி குற்றச்சாட்டை சொல்கிறார்கள். என்னைக்குறித்து மேல் அதிகாரியிடம் கூறிய புகார்குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை" என்றார்.