`இங்கதான் ஏமாற்றி பிழைக்க முடியும்' - சென்னை வந்த வடமாநில குடும்பம்  | North Indians Targeted Tamil Nadu to do Illegal activities

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (27/03/2019)

கடைசி தொடர்பு:16:14 (27/03/2019)

`இங்கதான் ஏமாற்றி பிழைக்க முடியும்' - சென்னை வந்த வடமாநில குடும்பம் 

டெல்லியிலிருந்து சென்னை வந்த ஒரு வடமாநில குடும்பத்தினர், நகைக்கடைக்குச் சென்று கவரிங் கம்மல்களைக் கொடுத்து தங்க நகைகளை வாங்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை வண்ணாரப்பேட்டை போலீஸார் துரிதமாக செயல்பட்டு பிடித்துள்ளனர். 

சென்னை வந்த வடமாநில மோசடி குடும்பம்

சென்னை தண்டையார்பேட்டையில் நகைக்கடை, அடகுக்கடை நடத்திவருபவர் நவரத்தன்சிங். இவரின் கடைக்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 50 வயது மதிக்கத்தக்க ஆணும் வந்தனர். அவர்கள், தங்களிடம் பழைய தங்கக் கம்மல்கள் உள்ளன. அதற்குப் பதிலாக புதியதாக குழந்தைக்கு தங்கச் செயின் வாங்க வேண்டும் என்று இந்தியில் கூறினர். அதை நகைக்கடை ஊழியர்களும் நம்பினர். இதையடுத்து, அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த ஆணும் தங்கச் செயினை அவசர அவசரமாக தேர்வு செய்தனர். சில நிமிடங்களிலேயே 6 கிராம் எடையுள்ள தங்கச் செயின் பிடித்திருப்பதாக அவர்கள் கூறினர். 

சென்னை வந்த வடமாநில குடும்பம்

அதன்பிறகு தங்கச் செயினுக்காக 7 கிராம் எடையுள்ள கம்மல்களை அந்தப் பெண் கொடுத்தார். அதை எடைப்போட்டு வாங்கிக் கொண்ட கடை ஊழியர்களும் சிரித்த முகத்துடன் பெண்ணிடம் தங்கச் செயினை கொடுத்தனர். அதன்பிறகு இருவரும் கடையிலிருந்து அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றனர். அவர்களை எதிர்பார்த்து கடையின் வெளியில் ஒருவர் காத்திருந்தார். நகைக்கடையை விட்டு வெளியேறிய அவர்கள் அடுத்த சில நிமிடத்திலேயே ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து தப்பினர். இது, நகைக்கடை ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.  

பெண் கொடுத்த கம்மலை பரிசோதித்தபோது நவரத்தன்சிங்குக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கம்மல்கள் கவரிங் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர், புதிய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீஸார் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது டெல்லியைச் சேர்ந்த கிசன்லால் (69) என்பவர் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது டெல்லியிலிருந்து குடும்பத்தோடு வந்து, கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. கிசன்லால் கொடுத்த தகவலின்படி அவரின் மகன் சஞ்செய் மற்றும் உறவினர்கள் சோனுகுமார், அவரின் மனைவி லதா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 ஜோடி கம்மல் மற்றும் 7 கிராம் எடையுள்ள கவரிங் நகைகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம்  

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிசன்லால், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் குடும்பத்தோடு குடியிருந்துவந்துள்ளார். தமிழகத்தில்தான் அதிகளவில் நகைகளை அணிவார்கள் என்பதை தெரிந்த கிசன்லால், குடும்பத்தினருடன் ரயிலில் சென்னை வந்தார். அரும்பாக்கத்தில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கிய கிசன்லால் மற்றும் அவரின் குடும்பத்தினர் புதுவண்ணாரப்பேட்டைக்கு வந்தனர். அங்குள்ள நவரத்தன்சிங் நகைக்கடைக்குச் சென்றுள்ளனர். அவரிடம்தான் பழைய நகைக்குப்பதிலாக புதிய நகைகளை வாங்கி ஏமாற்றியுள்ளனர். இன்னும் சிலரை அவர்கள் ஏமாற்றத் திட்டமிட்டுள்ளனர். அதற்குள் நாங்கள் அவர்களைப் பிடித்துவிட்டோம்"என்றனர். 

வடமாநில கொள்ளைக் கும்பலிடம் இந்தியில் போலீஸார் விசாரித்தபோது `சென்னையில்தான் கவரிங் நகைகளை எளிதில் மாற்ற முடியும் என்றுதான் இங்கு வந்தோம். நாங்கள் நினைத்தப்படி நகைக்கடைகாரரும் ஏமாந்துவிட்டார். இதனால் கொண்டு வந்த கவரிங் கம்மல்களை ஏமாற்றிவிட்டு டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் சிக்கிக் கொண்டோம்' என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். 

இதையடுத்து வடமாநில ஏமாற்றும் கும்பல் குடும்பத்தோடு சிறையில் அடைக்கப்பட்டனர். லதாவுக்கு கைக்குழந்தை உள்ளது. காவல் நிலையத்தில் அழைத்துவரப்பட்டபோது அந்தக்குழந்தை பசியால் கதறி அழுதது. உடனடியாக அந்தக் குழந்தைக்கு பால் வாங்கிக்  கொடுக்க காவலர்கள் ஏற்பாடு செய்தனர். வடமாநிலத்திலிருந்து ஏமாற்றுவதற்காகவே சென்னைக்கு திட்டமிட்டு வந்த குடும்பத்தினர் சிக்கிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.