`காடுவெட்டி குரு இல்லையே, பிரசாரம் செய்யவே சங்கடமா இருக்கு!- கண்கலங்கிய ராமதாஸ் | Ramadoss Election Campaign in Cuddalore Constituency

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (27/03/2019)

கடைசி தொடர்பு:09:32 (28/03/2019)

`காடுவெட்டி குரு இல்லையே, பிரசாரம் செய்யவே சங்கடமா இருக்கு!- கண்கலங்கிய ராமதாஸ்

"என் மாவீரன் காடுவெட்டி குரு இருந்திருந்தால் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பக்கமே நான் பிரசாரம் செய்ய வேண்டிய சூழல் வந்திருக்காது" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்கலங்கினார்.

                                

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், "இந்த தேர்தலில் பிரசாரம் செய்யவே சங்கடமாக இருக்கிறது. என் மாவீரன் காடுவெட்டி குரு இருந்திருந்தால் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பக்கமே வரவேண்டிய சூழல் வந்திருக்காது. அவரே வேட்பாளரை வெற்றி பெற வைத்து என் கண்முன்னே நிறுத்தியிருப்பார். ஆனால் அவர் இல்லாத தேர்தல் எனக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுக்கிறது" என்றார்.

மேலும் அவர் பேசுகையி்ல், "அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் நான் சொல்வது ஒன்று தான். நானே தேர்தலில் நிற்பதாக நினைத்து எங்களது வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். பெண்கள் காதுகொடுத்துக் கேட்க முடியாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை திருமாவளவன் பேசி வருகிறார். 100 இளைஞர்களைக் கொடுங்கள் நான் இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன் என்றார். தற்போது அவரிடம் 100 இளைஞர்களைக் கொடுத்தால் என்ன செய்வார் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். இவரது கட்சி அகற்றப்பட வேண்டும் என்னால் வளர்க்கப்பட்டவர். ஆனால் தற்போது சமூகத்தைச் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார் என நினைக்கவில்லை. ஒரு தலைவன் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஆனால் இவர் அவர்களைத் தூண்டிவிட்டு தவறான பாதைக்கு அழைத்துச் செல்வது வேதனையாக இருக்கிறது.

                                            

கொள்கையில்லாத கட்ட பஞ்சாயத்து செய்கின்ற கட்சி நாட்டுக்குத் தேவையற்றது. எனவே அக்கட்சியை அப்புறப்படுத்த வேண்டியது மக்களின் கடமை. எனவே அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகரை எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்குச் சிதம்பரம் தொகுதி வாக்காள பெருமக்கள் கொடுக்கும் பரிசு டெபாசிட் இழக்கச் செய்வதே. அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம். மீண்டும் நரேந்திர மோடிதான் பிரதமராவார். அப்போது ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 25 இழப்பீடு வழங்கி அத்திட்டத்தில் விவசாயிகளைப் பங்குதாரராக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் முந்திரி சாகுபடி அதிகளவில் உள்ளதால் முந்திரி தொழிற்சாலை அமைக்கவும் கும்பகோணத்திலிருந்து அரியலூருக்கும், சிதம்பரத்திலிருந்து அரியலூருக்கும் ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பேசினார்.கூட்டத்தில் அரசு தலைமைக்கொறடா ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.