‘2 மணி நேரம் காத்திருங்கள்’- கனிமொழி, தமிழிசை வேட்புமனுவில் ‘திடீர்’ சிக்கல்? | Lok sabha Election 2019 - EC Hold on Consideration of Kanimozhi , tamilisai Nomination

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (27/03/2019)

கடைசி தொடர்பு:14:34 (27/03/2019)

‘2 மணி நேரம் காத்திருங்கள்’- கனிமொழி, தமிழிசை வேட்புமனுவில் ‘திடீர்’ சிக்கல்?

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்செய்த தி.மு.க வேட்பாளர் கனிமொழி  மற்றும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் மனுக்களில் சில தகவல்கள் குறிப்பிடப்படாததால், இருவரின் வேட்பு மனுக்களையும்  ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழிசை வேட்புமனு தாக்கல் செய்கிறார்

 

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க சார்பில் கனிமொழி, பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  இவர்கள் அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 48 பேர் 62 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நந்தூரி மற்றும்  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் கண்காணிப்பாளர் சீமா ஜெயின் மற்றும் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.

இதில், தி.மு.க வேட்பாளர்களான கனிமொழி மற்றும் பா.ஜ.க வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வேட்புமனுக்களை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் சொந்தத் தொகுதி சேப்பாக்கம். இதனை கனிமொழி தன்னுடைய வேட்புமனுவில் 1- ஏ பிரிவில் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 1- பி பிரிவில் தூத்துக்குடி எனத் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, கனிமொழியின் கணவர் அரவிந்தன் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர். கனிமொழியின் கணவர் சிங்கப்பூரில் நடத்திவரும் நிறுவனத்தில் தனக்கு பங்குகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்கான பான் எண்னை அவர் குறிப்பிடவில்லை. இதனால், அவரது மனு ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கனிமொழி வேட்புமனுத் தாக்கல்

பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனுவைப் பொறுத்தவரை, அவர் தனது கணவர் சௌந்தரராஜனின் வருமானம் குறித்து வேட்புமனுவில் குறிப்பிடவில்லை எனவும், தான் இயக்குநராக உள்ள அரசுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனம் குறித்த பதவிகள், வருமானம்குறித்து அவர் தெரிவிக்கவில்லை எனவும், தனது மகள் மேற்கொண்டுவரும் மருத்துவப் படிப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மற்றும், படிவம் 5-ல் குறிப்பிட்ட ஒரு கட்டத்தை நிரப்பவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களுக்காக, தமிழிசை சௌந்தரராஜன் வேட்புமனுவை ஏற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலியம் நிறுவனத்தில் தமிழிசை வகித்துவரும் பதவியை ராஜினாமா செய்து, அந்தக் கடிதத்தை சமர்ப்பித்தால் மட்டுமே அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த இரண்டு வேட்பாளர்களின் வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனையை  2 மணி நேரத்திற்குத் தள்ளி வைப்பதாகத் தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி அறிவித்தார். கனிமொழி வேட்புமனு மீது பா.ஜ.க.,வினரும், பா.ஜ.க., மனு மீது தி.மு.க-வினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசையின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டார். தி.மு.க வேட்பாளர் கனிமொழி வேட்புமனு மீதான பரீசிலனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

நீங்க எப்படி பீல் பண்றீங்க