திருந்தி வாழ்ந்த பிரபல ரவுடி கிருஷ்ணமூர்த்தி கொலை - அலறியடித்து ஓடிய பக்தர்கள் | Gangster killed in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (27/03/2019)

கடைசி தொடர்பு:14:59 (27/03/2019)

திருந்தி வாழ்ந்த பிரபல ரவுடி கிருஷ்ணமூர்த்தி கொலை - அலறியடித்து ஓடிய பக்தர்கள்

சென்னை அரும்பாக்கத்தில் திருந்தி வாழ்ந்த பிரபல ரவுடி கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தியை மர்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 ரவுடி கொலை

 

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி (46). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ரவுடியாக வாழ்ந்த கிருஷ்ணமூர்த்தி திருந்தி வாழ்ந்து வந்தார். தற்போது அவர், தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்துவந்தார். 

இன்று காலை அவர், தண்ணீர் கேனை சப்ளை செய்வதற்காக அரும்பாக்கத்தில் உள்ள கோயில் அருகே மினி லாரியில் வந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் மினி லாரியிலிருந்து தப்பி ஓட முயன்ற கிருஷ்ணமூர்த்தியை அந்தக் கும்பல் வழிமறித்து வெட்டியது. பொதுமக்கள் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள், கோயிலுக்கு வந்த பக்தர்கள் என அனைவரும் ஓட்டம் பிடித்தனர். 

கிருஷ்ணமூர்த்தியை வெட்டிக் கொலை செய்த கும்பல் பின்னர் அங்கிருந்து பைக்குகளில் தப்பி ஓடியது. இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணமூர்த்தியின் சடலம், பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்ததும் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் அங்கு வந்தனர். கிருஷ்ணமூர்த்தியைக் கொலை செய்த கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிருஷ்ணமூர்த்தி, ஆரம்பத்தில் அரும்பாக்கம் பகுதியில் குடியிருந்துவந்தார். அப்போது அவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருந்தி வாழ்ந்த பிரபல ரவுடியான  கிருஷ்ணமூர்த்தி, அரும்பாக்கத்திலிருந்து திருவொற்றியூருக்கு குடிபெயர்ந்தார். தண்ணீர் கேன் சப்ளை செய்ய இன்று மினி லாரியில் வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் வந்த லாரியையும் கொலைக் கும்பல் சேதப்படுத்தியுள்ளது. முன்விரோதத்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது" என்றார். 

அரும்பாக்கத்தில் உள்ள கோயில் முன் ரவுடி கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.