`அரசே மது விற்கும்போது அதனால் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் பொறுப்பாகக் கூடாது?’ - நீதிமன்றம் கேள்வி | madras hc slams tn government

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (27/03/2019)

கடைசி தொடர்பு:16:25 (27/03/2019)

`அரசே மது விற்கும்போது அதனால் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் பொறுப்பாகக் கூடாது?’ - நீதிமன்றம் கேள்வி

மது போதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்குவது குறித்து ஏப்ரல் 4-க்குள் விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்த வழக்கில் வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும், ``தமிழகத்தில் சொந்த மக்களுக்கு மதுபான விற்பனையை மாநில அரசே நடத்தி, ஆண்டுக்கு 31,751 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. மாநில பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பது என்பது துரதிருஷ்டவசமானது'' என நீதிபதி வேதனை தெரிவித்தார். மேலும்,``குடிபோதையில் தான் விபத்துகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. மதுக் கொள்கையில் தமிழக அரசு மாற்றங்களைக் கொண்டு வராவிட்டால், இந்தக் குற்றச் சம்பவங்களில் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்'' என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
`மது போதையில் குற்றங்கள் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது. மதுவை விற்கும் தமிழக அரசை ஏன் இந்த குற்றச் சம்பவங்களுக்கு பொறுப்பாக்கக் கூடாது?'' எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி ``மாநில அரசு குற்றச்சம்பவத்துக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறி அபராதம் விதிக்க முடியும்'' என்று கடுமையாகச் சாடினார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டு, விசாரணை ஏப்ரல் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.