``அண்ணனுக்கு ஒரு ராசி இருக்குது, எங்கு போனாலும்..!"- பிரசாரத்தில் வைகோவைக் கிண்டலடித்த ஓ.பி.எஸ் | OPS teases vaiko in election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (27/03/2019)

கடைசி தொடர்பு:18:10 (27/03/2019)

``அண்ணனுக்கு ஒரு ராசி இருக்குது, எங்கு போனாலும்..!"- பிரசாரத்தில் வைகோவைக் கிண்டலடித்த ஓ.பி.எஸ்

``ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக அமர்த்திய பின்தான் எனது உயிர் பிரியும் என்று கூறியிருக்கிறார் வைகோ. ஆனால், அவர்தான் கடந்த தேர்தலின்போது, நான் உயிரோடு இருக்கும்வரை ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர விடமாட்டேன் என்று சவால் விட்டார்'' என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிண்டலடித்தார்.

 தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

அ.தி.மு.க கூட்டணி சார்பில் கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ``நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நல்லவர்கள் ஒன்று கூடி ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்தியாவில் வலிமையான ஒரு தலைமை ஆட்சி பீடத்தில் இருக்க வேண்டும். இந்தத் தேர்தலில் தர்மத்தை கொள்கையாகக் கொண்ட நல்லவர்கள் அ.தி.மு.க பக்கமும், அதர்மத்தையே கொள்கையாகக் கொண்ட அராஜக அணியாக தி.மு.க, காங்கிரஸ் கட்சி நிற்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இந்தியாவை 10 ஆண்டுக்காலம் ஆட்சி செய்திருக்கிறார்கள். அப்போது தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளைப் பறிக்கும் விதமாகப் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. அதைக் காப்பதற்கான என்ன முயற்சிகளை அவர்கள் எடுத்தார்கள் என்று நாம் எண்ணிப் பார்த்திட வேண்டும். தஞ்சைப் பகுதியில் நெல் விளைந்தால்தான் நாம் உணவுப் பஞ்சம் இல்லாமல் இருக்க முடியும்.

கர்நாடகாவில் தோன்றி தமிழகத்திற்கு வந்து சேரும் காவிரி காலம்காலமாக நாம் பெற்றிருந்த உரிமை. ஒரு நதி இரண்டு மாநிலங்களில் ஓடுகின்ற போது, மேற்கில் இருக்கும் மாநிலம் கிழக்கில் இருக்கும் மாநிலத்திடம் அனுமதி பெற்றுத்தான் தடுப்பணைகளைக் கட்ட முடியும். இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. ஆனால், தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, இந்த விதிகளை மீறி கர்நாடக அரசு நான்கு அணைகளைக் கட்டியது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கான செயலை கருணாநிதி மேற்கொள்ளவில்லை. அன்று ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் அரசுக்கு பயந்து அமைதியாக இருந்துவிட்டார். அந்த வழக்கை 17 ஆண்டுகளாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம் 2007-ல் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அப்போது தமிழகத்தில் தி.மு.க-வின் ஆட்சியும், மத்தியில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போது ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்றத்தின் மத்திய அரசிதழில் வெளியிட்டால்தான் தமிழகத்தின் உரிமை காப்பாற்றப்படும் என்று தி.மு.க-வை வலியுறுத்தினார்கள். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை. 2011-ல் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த பிறகு, உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி அரசாணை வெளியிடச் செய்தார்.

ஓபிஎஸ் பிரசாரம்

இலங்கையில் இருக்கும் நம் சொந்தங்கள் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சம உரிமையைத் தர ராஜபக்சே அரசு மறுத்தது. அதனால் அங்கு மிகப்பெரிய போராட்டம் உருவெடுத்தது. அதை ஒடுக்க ராஜபக்சே அரசு கையில் எடுத்தது ராணுவம். 2009-ல் அப்படி ஒரு போர் நடக்க இருப்பது உளவுத்துறை மூலம் இங்கிருந்த தி.மு.க அரசுக்கும், அப்போதிருந்த மத்திய காங்கிரஸ் அரசுக்கும் தெரியும். சிறிதளவு எச்சரிக்கை செய்திருந்தாலும் அந்தப் போரை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், இவர்கள் அதைச் செய்யவில்லை. கருணாநிதி மெரினாவில் ஒரு டிராமாவை நடத்திவிட்டு, தான் டெல்லியில் பேசியதாகவும், அவர்கள் இலங்கையிடம் சொல்லி போரை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார். இவர் பேச்சைக் கேட்டு பதுங்குக் குழியிலிருந்து வெளியே வந்த பெண்களையும் குழந்தைகளையும் விமானம் மூலம் குண்டு போட்டு கொன்று குவித்தது இலங்கை ராணுவம். அன்று மட்டும் 40,000 உயிர்கள் கொல்லப்பட்டது. 5 லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான அந்தக் கூட்டணிதான் தற்போது மெள்ள  மெள்ள வந்துகொண்டிருக்கிறது.

இவர்களின் ஆட்சியில் வன்முறை, சாதிக்கலவரம் தலைவிரித்தாடியது. மாமன் மச்சான் என அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு தினகரன் அலுவலகத்தை தீ வைத்து எரித்தார்கள். அதில் 3 அப்பாவிகள் உயிரிழந்தார்கள். இன்றைக்கு கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் தலைவராக வந்ததும் நடக்கும் அராஜகத்தைப் பார்த்தீர்களா? பிரியாணி கடையில் போய் சாப்பிட்டுவிட்டு, காசு கேட்ட உரிமையாளரை மல்யுத்த வீரர்களைப் போல் போட்டு அடிக்கிறார்கள். ரோட்டில் இருக்கும் பஜ்ஜி கடையில் சாப்பிட்டுவிட்டு அங்கும் காசு கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இவ்வளவும் அராஜகம் செய்யும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும். ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக அமர்த்திய பின்தான் எனது உயிர் பிரியும் என்று கூறியிருக்கிறார் வைகோ. ஆனால், அவர்தான் கடந்த தேர்தலின்போது, நான் உயிரோடு இருக்கும்வரை ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர விடமாட்டேன் என்று சவால் விட்டார். தற்போது அவரது பம்பரம் சின்னத்தைவிட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

பன்னீர்செல்வம் பிரசாரம்

அண்ணன் வைகோவுக்கு ஒரு ராசி இருக்கிறது. அவர் எங்கு போய்ச் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஒரு சீட்கூட கிடைக்காது. சரி போகட்டும், அவரை நாம் வாழ்த்து அனுப்பி வைப்போம். சென்ற தேர்தல் பேன்ட் போட்டுக்கொண்டு நடந்தார், ஓடினார், சைக்கிள் ஓட்டினார், டீ கடையில் டீ குடித்தார். டீ குடிப்பது அதிசயமா, நாம் டீ கடையையே நடத்தியிருக்கிறோம். அதனால் அந்தப் பாச்சா நம்மிடம் பலிக்குமா, பலிக்கவில்லை தோற்றுவிட்டார். என்னைப் பாருங்கள்... நான் ஏதாவது கட்டப் பஞ்சாயத்து செய்வதாக உங்களுக்குத் தகவல் வருகிறதா. ஆனால் தி.மு.க-வில் கீழிருந்து மேலே வரை அனைத்தும் கட்டப்பஞ்சாயத்துதான். அதனால் யார் ஆட்சியில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று நீங்கள் எடைபோட்டுப் பாருங்கள். அதேபோல இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏக்கள் ஆன 23 பேர், அமைச்சர் பதவிக்காக துரோகிகளாக மாறி இங்கும், அங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். நம் இயக்கத்தைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வமோ, அண்ணன் எடப்பாடியோ, சாதாரண தொண்டர்களில் ஒருவர் கூட முதல்வராக, கழக ஒருங்கிணைப்பாளராக வந்துவிட முடியும். ஆனால் மற்ற கட்சிகளில்? அதனால் உங்கள் பொண்ணான வாக்குகளை 'சின்னக் கவுண்டர்' ஆசிபெற்ற வேட்பாளருக்கு அளியுங்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க