பலன் தருமா புதிய திட்டம்! - கூவம் ஆறு உயிர்பெறுமா? | River Cooum to restored soon by TN govt

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (27/03/2019)

கடைசி தொடர்பு:18:30 (27/03/2019)

பலன் தருமா புதிய திட்டம்! - கூவம் ஆறு உயிர்பெறுமா?

கூவம் ஆறு. கேசாவரத்திலிருந்து கல்லாறின் கிளை நதியாகப் பிரிந்து வருகிறது. அங்கிருந்து தொடங்கும் அதன் பயணம், சென்னை நேப்பியர் பாலத்தின் அருகே கடலில் கலக்கின்றது. பல்வேறு நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் வெளியேற்றும் கழிவுகளாலும், சென்னை மாநகராட்சியின் மோசமான கழிவு மேலாண்மையாலும் இன்று சீரழிந்துக் கிடக்கின்றது.

கூவம்

Photo Courtesy: Peter Fristedt

மீன்பிடித் தொழிலில் செழித்திருந்த கூவத்தில் தற்போது ஓடுவதென்னவோ நம் கழிவுகள்தான். ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம் மூலமாக இதைச் சரிசெய்ய தமிழக அரசு முனைந்திருக்கிறது. கூவத்தை சீரமைக்க 3,833.62 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டில் தொடங்கி, நேப்பியர் பாலத்தருகே கடலில் கலக்கும்வரை முதல்கட்டச் சீரமைப்பு நடக்கவுள்ளது. சுமார் 32 கிலோமீட்டர் தூரமுடைய இதற்காக 604 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்கியுள்ளன. பொதுப்பணித் துறை, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, கழிவுநீர் அகற்று வாரியம் உட்பட பல்வேறு அரசுத் துறைகள் இந்தத் திட்டத்தில் பங்கெடுத்துள்ளன.

கூவம் ஆக்கிரமிப்பு

Photo Courtesy: Rasnoboy

கூவம் ஆற்றிலிருக்கும் கடலோரக் காவல்படையின் ஆக்கிரமிப்புக் கட்டடம்

கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்க மாற்று ஏற்பாடு செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். கூவம் நதியின் வெள்ளநீர் கொள்ளளவுப் பகுதியை மேம்படுத்துவதும் அதில் அடக்கம். நதியோரத்தில் வாழும் மக்களுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருவதையும், நதியின் பல்லுயிர்ச்சூழலை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கியமான சில அம்சங்கள். எதிர்காலத்தில் நீர்வழிப் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நதியோரத்திலிருக்கும் மக்கள் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவது, மாற்றுக் குடியிருப்புகளை ஏற்படுத்துவது பற்றி இத்திட்டம் பேசுகிறது. அதேசமயம், கூவம் நதியோரத்தில் இருக்கும் கட்டட ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்தினால், முழுமையான சீரமைப்புப் பணியாக இந்தத் திட்டம் அமையும்.