`தவறா பேசினாங்க, அக்காவை கழுத்தை அறுத்துக்கொன்னுட்டேன்!'- தம்பி வாக்குமூலம் | a brother has murdered his sister for family isues

வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (27/03/2019)

கடைசி தொடர்பு:19:14 (27/03/2019)

`தவறா பேசினாங்க, அக்காவை கழுத்தை அறுத்துக்கொன்னுட்டேன்!'- தம்பி வாக்குமூலம்

நெல்லையில் குடும்பத் தகராறு காரணமாக சகோதரரே அக்காவைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை சம்பவம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்தவர் லெனின். இவர் வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கனிமொழி என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமாகிய சில நாள்களிலேயே கனிமொழிக்கும் லெனினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

முதுகலை படித்திருந்த கனிமொழிக்குத் தனது கணவன் வேன் டிரைவராகச் செயல்படுவது பிடிக்காததால் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கனிமொழி அடிக்கடி கணவருடன் கோபித்துக்கொண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர் கனிமொழியை தவறாகப் பேசியிருக்கிறார்கள். 

கொலையான கனிமொழிஅதனால் அவரது பெற்றோர் கனிமொழியைச் சமாதானப்படுத்தி ஏர்வாடியில் உள்ள கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனிமொழிக்கு கணவருடன் தகராறு ஏற்பட்டு தாய்வீட்டுக்கு வந்துள்ளார். கனிமொழியை அவரின் பெற்றோர், மற்றும் தம்பி சுந்தரபாண்டியன் ஆகியோர் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் கனிமொழி அதற்குச் சம்மதிக்க மறுத்துள்ளார். இதனால் பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவரின் சகோதரர் சுந்தரபாண்டியன், கனிமொழி தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு  பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காவைக் கணவன் வீட்டுக்குச் செல்லுமாறு பலமுறை வலியுறுத்தியும் அவர் அடிக்கடி திரும்பி வந்ததால், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தவறாகப் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக சுந்தரபாண்டியன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குடும்பச் சண்டை காரணமாக அக்காவை அவரின் சகோதரரே கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.