ஊழலில் ஊறிக் கிடக்கும் மத்திய மாநில அரசுகள்! - பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு | central and state government are fraudulent, says peter alphones

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (27/03/2019)

கடைசி தொடர்பு:09:44 (28/03/2019)

ஊழலில் ஊறிக் கிடக்கும் மத்திய மாநில அரசுகள்! - பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படாமல், அ.தி.மு.க.வும், பாரதிய ஜனதாவும் ஊழலில் ஊறித் திளைத்து வருகின்றனர் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

பீட்டர் அல்போன்ஸ்

நெல்லையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான செல்லப்பாண்டியன் பவனத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வும் மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்துப் பேசாமல், சாதி  மதம் குறித்து பேசி மக்களைத் திசை திருப்பி வருகின்றனர். 

மத்திய மாநில அரசுகள் ஊழலில் ஊறிக்கிடக்கின்றன. இந்த அரசுகள், மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவராமல் தங்களுக்கு எந்தத் திட்டங்களில் கமிஷன் அதிகம் கிடைக்கும் என்பதைப் பற்றியே சிந்திக்கின்றன. அப்படி அதிக கமிஷன் கிடைக்கும் திட்டங்களை மக்களிடம் திணிக்கின்றன. 

தமிழக அமைச்சர் வேலுமணி தனக்கு வேண்டிய அதிகாரிகளை மட்டுமே உள்ளாட்சித் துறையில் நியமித்து பணியாற்ற அனுமதிக்கிறார். அது மட்டுமல்லாமல் சேலம் , ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே ஒப்பந்தப் பணிகளைக் கொடுத்து லாபம் சம்பாதிக்கிறார். அவருடைய செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒத்துழைப்புடன் அவர் இப்படி செயல்பட்டு வருகிறார். 

செய்தியாளர் சந்திப்பு

வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி, வேலைவாய்ப்பை உருவாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் இரண்டு சதவிகிதம் பேருக்குக் கூட பணி வழங்கவில்லை. பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு குறு தொழில் முடக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து ராகுல்காந்தி பிரதமராவார். அப்படி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வருடத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.