`கையெழுத்து இல்லன்னு தள்ளுபடி பண்ணிட்டாங்க!'- நாம் தமிழர் வேட்பாளர் வேதனை | Nilgiris constituency Nam tamilar candidate's nomination rejected

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (27/03/2019)

கடைசி தொடர்பு:19:40 (27/03/2019)

`கையெழுத்து இல்லன்னு தள்ளுபடி பண்ணிட்டாங்க!'- நாம் தமிழர் வேட்பாளர் வேதனை

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரின் மனு உட்பட 5 பேரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நாம் தமிழர் வேட்பாளர்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிட தி.மு.க. சார்பில் ஆ.ராசா, அ.தி.மு.க. சார்பில் தியாகராஜன், அ.ம.மு.க சார்பில் எம்.ராமசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரன், படுக தேச பார்ட்டி சார்பில் சுப்பிரமணி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அசோக்குமார், அ.தி.மு.க மாற்று வேட்பாளர் சரவணகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிமேகலை, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி சார்பில் விஜேயேந்தர் கண்ணபிரான், சுயேச்சையாக கே.ராஜா, ஆறுமுகம், நாகராஜன், ராஜரத்தினம், கலைச்செல்வன், காமராஜ் உட்பட 15 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். 

இந்த நிலையில், தேர்தல் பார்வையாளர் அசன் லால், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிற்பகல் வரை நடந்த வேட்புமனு பரிசீலனை முடிவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிமேகலை, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி சார்பில் விஜேயேந்தர் கண்ணபிரான், சுயேச்சை வேட்பாளர்களான காமராஜ், கலைச்செல்வன், அ.தி.மு.க மாற்று வேட்பாளர் சரவணகுமார் ஆகியோரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவர்கள் 5 பேரும் முறையாக வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படாத நிலையில், தள்ளுபடி செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். தற்போது போட்டியில் 10 பேர் மட்டுமே உள்ளனர். வேட்புமனுக்கள் திரும்பப் பெற வரும் 29-ம் தேதி கடைசி நாள். இதில், யாரேனும் வாபஸ் பெற்றால் மேலும் வேட்பாளர்கள் குறைய வாய்ப்புள்ளது.

வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிமேகலை கூறுகையில், ``நீலகிரி தொகுதியில் முதல் ஆளாக வேட்புமனுத் தாக்கல் செய்தது நான்தான். வேட்புமனுவில் முன்மொழிபவர்களின் கையெழுத்து இல்லை எனக் கூறி எனது வேட்புமனுவை நிராகரித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்க உள்ளோம்'' என்றார்.