``சின்னப்பையன் செந்தில்பாலாஜி விவரம் தெரியாமல் உளறுகிறார்!" - தம்பிதுரை தாக்கு! | thambidurai slams senthil balaji

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (27/03/2019)

கடைசி தொடர்பு:10:12 (29/03/2019)

``சின்னப்பையன் செந்தில்பாலாஜி விவரம் தெரியாமல் உளறுகிறார்!" - தம்பிதுரை தாக்கு!

``நான் பைபாஸ் எம்.பியா. பைபாஸ் எம்.பி என்றால், பெண்ணை திருமணம் செய்துவிட்டு ஒடியவர் என்று அர்த்தம். அது தெரியாமல் சின்னப்பையன் செந்தில் பாலாஜி உளறுகிறார்" என்று தம்பிதுரை கடுமையாக தாக்கிப் பேசினார்.

 தம்பிதுரை வேட்புமனு...

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. களத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக மறுபடியும் தம்பிதுரையே களமிறக்கப்பட்டிருக்கிறார்


 செந்தில் பாலாஜி

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, ஜோதிமணி வேட்பாளராகி இருக்கிறார். அ.ம.மு.க சார்பில் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இறங்கிவிட்ட தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை,`சின்னப்பையன்' என்று கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். கரூர் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம், தளவாபாளையம், கிழக்கு தவுட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி, புகளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

 தம்பிதுரை

அப்போது பேசிய தம்பிதுரை, ``கை சின்னத்துக்கு வாக்களித்தால், குடிக்க தண்ணீர் கூட கையளவு கிடைக்காது. காங்கிரஸ் கர்நாடகாவில் ஆண்டு கொண்டு இருப்பதினால், காவிரி நீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும், கை சின்னத்திலும், அதைச் சார்ந்த தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தால் சுத்தமாக கையளவு கூட குடிக்க காவிரி நீர் கிடைக்காது. கை சின்னத்துக்கு நீங்கள் வாக்களித்தால், பிறகு அவர்களின் வெற்றுக் கையசைவைதான் பார்க்க முடியும். ஆகவே, நன்கு சிந்தித்து வாக்களியுங்கள்.

மேலும், உங்க ஊர்கள் வரும் சட்டமன்றத் தொகுதியான அரவக்குறிச்சி தொகுதிக்கு ஒரு சாபக்கேடு. அ.தி.மு.க ஆட்சி அமைக்கப்பட்டு மூன்று வருடங்களாகியும் இங்கு எம்.எல்.ஏ கிடையாது. ஏனென்றால், கட்சி மாறி, கட்சி மாறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செல்வதினால்தான், அவர் இந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ ஆகியும், இப்போது எம்.எல்.ஏ கிடையாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, எம்.பி தேர்தல் முடிந்ததும், இந்த சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் வரும். அப்போதும் இரட்டை இலைக்கான வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். 

கடந்த முறை, எனக்கு வாக்களிக்க கேட்டு, என்னைப் புகழ்ந்து, `பல திட்டங்களைக் கொண்டு வந்தவர் தம்பித்துரை' என்று புகழ்ந்த மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை இதே பகுதிக்கு வந்தால், இப்போது `பைபாஸ் எம்.பி' என்று என்னைப் பற்றிச் சொல்வார். சின்னப்பையன் செந்தில் பாலாஜிக்கு என்ன தெரியும். என்னை பைபாஸ் எம்.பி என்கிறார். ஆனால், அவர்தான் பைபாஸ் மாப்பிள்ளை. பைபாஸ் மாப்பிள்ளை என்றால் என்னன்னு தெரியுமா. ஒரு பெண்ணை அவரது பிறந்த வீட்டில் இருந்து திருமணம் செய்துவிட்டு, பின்பு அந்த பெண்ணை கழட்டி விட்டுவிட்டு ஒடிப்போனவர்' என்று அர்த்தம். நான் அப்படியல்ல. பெண் எடுத்தது வேண்டுமென்றால் அரவக்குறிச்சி தொகுதியே தவிர, நான் அவரைப்போல பெண்ணை விட்டுவிட்டு எங்கும் ஒடவில்லை. என்னைப் பற்றி சின்னைப்பையன் செந்தில் பாலாஜிக்கு என்ன தெரியும். பைபாஸ் சாலையை அமைத்த எம்.பிதான் நான். மத்தபடி பைபாஸ் எம்.பியெல்லாம் நான் இல்லை" என்றார் அதிரடியாக!