`தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார்கள்; உங்களை உதயசூரியன்தான் காப்பாற்றும்!' - வைகோ பிரசாரம் | vaiko slams tn government

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (27/03/2019)

கடைசி தொடர்பு:10:13 (29/03/2019)

`தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார்கள்; உங்களை உதயசூரியன்தான் காப்பாற்றும்!' - வைகோ பிரசாரம்

``மேக்கே தாட்டூ அணை கட்ட வெளிப்படையாக ஏற்பாடு செய்து அனுமதி கொடுத்தது மோடிதான். அவர் மீது நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்''  என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

வைகோ

சென்னை பெரம்பூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது, பேசிய அவர்,  ``இந்தியா அடுத்து காணப்போவது ஜனநாயகமா அல்லது பாசிசமா என்று தீர்மானிப்பது நீங்கள்தான். நாட்டினுடைய ஜனநாயகத்தைக் காப்பற்ற உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.

பிராரக்கூட்டம்

இருபெரும் கடமைகள் பெரம்பூர் தொகுதி வேட்பாளர்களுக்கு உள்ளது. நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள். தமிழகத்தின் அவலமும் ஊழலும் நிறைந்த கேடுகெட்ட அரசை அகற்ற பெரம்பூர் ஆர்.டி.சேகருக்கு வாக்களியுங்கள். தமிழகத்தில் கல்வியில் ஊழல், பல்கலைக்கழகம் ஊழல், குட்கா பேரம், துணை வேந்தர் நியமனத்தில் ஊழல், ஆர்.கே நகர் இடைத்தேர்தலின்போது விஜயபாஸ்கர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது. பாராங்கல்லை தூக்கிப் போடுவதுபோல் சொத்து வரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு கேட்டால் கழிவுநீர் குழாய் துண்டிப்பு மிரட்டல்.

வைகோ

தமிழ்நாட்டில் இந்த ஆட்சி இருக்கும் வரை தொழிற்சாலைகள் வராது. தொழிற்சாலை ‌பல ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குப் போய்விட்டது. எனவே, அரசு மருத்துவமனைகளில் உயிருக்குப் பாதுகாப்பில்லை ஹெச்.ஐ.வி ரத்தம்‌ செலுத்தப்பட்ட பெண் குடும்பமே இன்று அழிந்துள்ளது. மேலும், 15 கர்ப்பிணிப் பெண்கள் கெட்டுப்போன ரத்தம் செலுத்தியதால் உயிரிழந்துள்னர். மத்திய அரசுக்கு கை கட்டி மாநில அரசு சேவை செய்து தமிழகத்தை அடமானம் வைத்துள்ளது. ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறோம். சிற்பங்களைக் கண்டுபிடித்து வரும் பொன்மாணிக்கவேலுக்கு அ.தி.மு.க ஆட்சியில் தொல்லை கொடுக்கிறார்கள்.  உலகிலேயே தமிழ்நாட்டில் இருக்கும் அழகான சிற்பங்கள் ஆலயங்கள் எங்கும் இல்லை.

கூட்டம்

இந்துத்துவா சக்திகளின் பிரதிநிதியாக மோடி உள்ளார். தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியைக்கூட முழுவதும் கொடுக்கவில்லை. மேக்கே தாட்டூ அணை கட்ட வெளிப்படையாக ஏற்பாடு செய்து அனுமதி கொடுத்தது மோடிதான் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இதைக் கட்டினால் தண்ணீர் இல்லாமல் போய் வறட்சி நிலவி விவசாயம் பொய்த்து நிலங்களை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் 13 பேரை கொன்றார்களே அதுவும் அ.தி.மு.க ஆட்சியில்தான். ஸ்டெர்லைட் விவகாரத்தில் முதல்வர், டி.ஜி.பி விசாரிக்கப்பட வேண்டும் கோயம்புத்தூர் சம்பவம் மனதை பதறவைக்கிறது. பொள்ளாச்சி சம்பவம் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நாசமாக்கப்பட்டார்கள். இதற்கு ஆளும் கட்சிதான் காரணம் என சொல்லப்படுகிறது. உதயசூரியன் சின்னம்தான் உங்களைக் காப்பாற்றும்'' என தெரிவித்தார்.