`எங்கள் மீது ஒரு அடி விழுந்தால்...!’ - அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த செந்தில்பாலாஜி | Senthil balaji angry talk against minister

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:14 (29/03/2019)

`எங்கள் மீது ஒரு அடி விழுந்தால்...!’ - அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த செந்தில்பாலாஜி

 செயல்வீரர்கள் கூட்டம்

``கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தி.மு.க கூட்டணி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஆனால், தி.மு.க தொண்டர்கள் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக நினைத்துக்கொண்டு அவரது வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்" என்று செந்தில்பாலாஜி பேசினார்.


 செந்தில்பாலாஜி

கரூரில் தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் கரூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய, தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, ``காவல்துறை வேட்புமனுத் தாக்கலின்போது மிகுந்த ஆணவத்தோடு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டது. ஆளுங்கட்சி அமைச்சரின் தூண்டுதலின்பேரில், என்மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம், நான் அஞ்சப்போவதில்லை. எங்கள் மீது ஒரு அடி விழுந்து இருந்தால், திருப்பி அடிப்போம். அது மரண அடியாகத்தான் இருக்கும். எல்லாக் காவல்துறை அதிகாரிகளும், நான் அமைச்சராக இருந்தபோது, சல்யூட் அடித்தவர்கள்தான். `ஐயா' என்று பம்மிப் பதுங்கி என்னை அழைத்தவர்கள்தான். ஆனால், இப்போது என்மீதே கைவைக்கிறார்கள். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்று சொன்னால், நிச்சயம் அதன் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னம் போட்டியிடுவதாக எண்ணி காங்கிரஸ் வேட்பாளர் சகோதரி ஜோதிமணியை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவரது வெற்றிக்காக தி.மு.கவினர் பாடுபட வேண்டும்" என தி.மு.க, கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


 ஜோதிமணி பேசியபோது...

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, ``நரேந்திர மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மக்களை ரோட்டில் நிற்க வைத்தது. தொழில் முடக்கம், பணவீக்கம், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்றவற்றால் இந்தியா தள்ளாடிய காலம் இது. இரண்டாவதாகத் தொழில்களை மேம்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்புத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய மோடி அரசு, அதன்மூலம் நடுத்தர மக்களைத் தொழில் செய்ய முடியாமல் வரிச்சுமையை அதிகரிக்க வைத்துள்ளது" எனக் குற்றம்சாட்டிப் பேசினார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி என்றாலும், களத்தில் தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜிதான் தீவிரப் பணியாற்றி வருகிறார்.