குற்றாலீஸ்வரன்  சாதனையை முறியடிக்கப் புறப்பட்ட தேனி சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்! | Theni boy who went to the swim at the age 10 to set record

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (28/03/2019)

கடைசி தொடர்பு:07:50 (28/03/2019)

குற்றாலீஸ்வரன்  சாதனையை முறியடிக்கப் புறப்பட்ட தேனி சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்!

 தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணைக் கடல் பகுதியை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளான் தேனியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்.

பாக் நீரிணை பகுதியை நீந்தி கடக்க சென்ற சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்.

உலகின் பல்வேறு பகுதிகளில், கடல்களுக்கு இடையே நீந்திக் கடந்து சாதனை படைப்பவர்களின்  களமாக தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணைப் பகுதி உள்ளது. கோடை காலமான மார்ச் முதல் மே வரையிலான காலங்களில், இக்கடல் பகுதியில் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். கடந்த ஆண்டு வரை பல்வேறு நீச்சல் வீரர்கள் இந்தக் கடல் பகுதியை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளனர். கடந்த 1994 -ம் ஆண்டு, தனது 12  வயதில் பாக் நீரிணையை 16 மணி நேரத்தில் நீந்திக் கடந்த நீச்சல் வீரனாக குற்றாலீஸ்வரன்  சாதனை படைத்துள்ளார்.

இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், தேனியைச்  சேர்ந்த ரவிக்குமார் - தாரணி தம்பதியின் மகன் ஜெய் ஐஸ்வந்த் பாக் நீரிணைப் பகுதியை நீந்திக் கடக்க உள்ளார். 10 வயது சிறுவனான ஜஸ்வந்த், தேனியில் உள்ள பள்ளி ஒன்றில் 4 -ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சலில் ஆர்வம்கொண்ட சிறுவன் ஜெய் ஜஸ்வந்துக்கு, கடந்த 3 ஆண்டுகளாக தேனி மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் விஜயகுமார் பயிற்சியளித்துவருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு 81 நிமிடங்கள் தொடர்ந்து நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். மேலும் மாவட்ட, மாநில அளவில் நடத்தப்பட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கடலில் நீந்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்ட  ஜஸ்வந்த், தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான 30 கி.மீ தூரத்தை நீந்திக் கடக்கும் சாதனையில் ஈடுபட உள்ளார்.  இதற்காக, நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து தனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர், வழிகாட்டும் குழுவினருடன், ஜஸ்வந்த் தலைமன்னாருக்குச் சென்றுள்ளார். இன்று (28-ம் தேதி) அதிகாலை 2 மணியளவில், தலைமன்னார் துறைமுகத்திலிருந்து நீந்தத் தொடங்கி, மாலை 4 மணிக்குள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரையேறுவார்.