ரஃபேல் ஊழல், வெளிநாட்டுப் பயணம் - பிரசார வாகனத்தில் வித்தியாசம் காட்டும் கோவை சி.பி.எம் வேட்பாளர் | Covai Cpm p.r.Natarajan starts campaign

வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:14 (29/03/2019)

ரஃபேல் ஊழல், வெளிநாட்டுப் பயணம் - பிரசார வாகனத்தில் வித்தியாசம் காட்டும் கோவை சி.பி.எம் வேட்பாளர்

கோவை நாடாளுமன்றத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்,  தனது பிரசாரத்தை நேற்று தொடங்கினார். ஏரோப்ளேன் வடியில் இருந்த அவரது பிரசார வாகனத்துக்குக் கொடுத்த விளக்கம், பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது. 

நாடாளுமன்றத் தேர்தல் கோவை சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

மத சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பாக  கோவை  நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின்  பி.ஆர்.நடராஜன். பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், அ.ம.மு.க வேட்பாளர் அப்பாதுரை, ம.நீ.ம கட்சியின் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் ஆகியோரை எதிர்த்து தேர்தல் களம் காணும்  பி.ஆர்.நடராஜன், தனது முதல் பிரசாரத்தை கோவையை அடுத்த,  பாப்பநாயக்கன் பாளையத்தில் நேற்று தொடங்கினார்.  சி.பி.எம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பிரசாரத்தை தொடக்கிவைக்க, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நா.கார்த்திக், தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்கள் இதில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.  

கோவை சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

பி.ஆர்.நடராஜனின் பிரசார வாகனமே வித்தியாசமாக, ‘ஏரோப்ளேன்’ போல வடிவமைத்திருந்தார்கள். பி.ஜே.பி-யின் ரஃபேல் ஊழலை நினைவுபடுத்துவதற்கும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி விமானத்தில் வெளிநாடுகளுக்குப்  பறந்துகொண்டிருந்தையும் 
மோடி இந்தியாவிலேயே இல்லை’ என்பதையும் மக்களுக்கு  அடையாளப்படுத்துவதற்காக,  பிரசார வாகனத்தை இப்படி தயாரித்திருக்கிறோம்’ என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்ல, கேட்கும் பொதுமக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். பிரசார மைக் பிடித்த பி.ஆர்.நடராஜன், “இந்தத் தேர்தலை மற்ற தேர்தல்களைப்போல பார்க்காதீர்கள். கடந்த 5 ஆண்டுகாலமாக  மத்தியில் ஆளுங்கின்ற பா.ஜ.க அரசு,  சட்டங்களை எல்லாம் தகர்த்து, சர்வதிகார ஆட்சியை  நடத்தியிருக்கு. சர்வதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல் இது.

சி.பி.எம் நடராஜன்

மத சார்பின்மைக்கும் வகுப்பு வாதத்திற்கும் இடையே நடக்ககூடிய தேர்தல் இது. மக்கள் நலனுக்கும் - கார்ப்பரேட் கப்பெனிகளுக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல் இது, தி.மு.க தலைமையிலான எங்கள்  கூட்டணியின் வேட்பாளர்களை நீங்கள் வெற்றிபெற வைக்கும்போதுதான்  மத்தியில் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, தமிழகத்திலும்  அரசியல் மாற்றம் உருவாகும். மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவற்றால், கோவையின் உயிர் நாடியான  சிறு-குறு தொழில்கள்  முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க அரசு பா.ஜ.க-விற்கு எடுபுடி அரசாக இருக்கிறது. பா.ஜ.க-வை தோற்கடித்து தேசத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தில் அ.தி.மு.க-வை தோற்கடித்து, தமிழகத்தை மீட்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க