``சுழற்சி முறையில் பிரதமர் தேர்வு!” - பிரசாரத்தில் சீமான் சொன்ன ஐடியா | 'Save the country from Modi!' - Seeman

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:14 (29/03/2019)

``சுழற்சி முறையில் பிரதமர் தேர்வு!” - பிரசாரத்தில் சீமான் சொன்ன ஐடியா

``ரூ.15 லட்சம் போடுவதாகச் சொன்ன மோடி, அப்பத்தா சுருக்குப்பையில் இருந்த பணத்தையும்கூட எடுத்துக்கொண்டார். மோடியிடமிருந்து, இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.

வேலூரில் பேசிய சீமான்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, நேற்று (27-ம் தேதி) இரவு வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது, ``மோடி ஆட்சிக்கு வந்தால் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்னார். ஆனால், அப்பத்தா சுருக்குப்பையில் இருந்த பணத்தையும்கூட அவர் எடுத்துக்கொண்டார். அடிமை இந்தியாவில், வெள்ளைக்காரனுக்கே இவ்வளவு கப்பம் கட்டியதில்லை. இந்தியா, இப்போது விற்பனைக்கு வருகிறது. 

நாட்டை சீக்கிரம் விற்றுவிட்டு கல்லா கட்டுவதற்காக மோடியும், ராகுலும் போட்டியிடுகிறார்கள். பல நாடுகளின் ஒன்றியமாக இந்தியா மாறிவிட்டது. சுழற்சி முறையில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மாற்றம் என்பது செயல். நாம் தமிழர் கட்சி மட்டுமே, பொதுமக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்தபிறகு பல மடங்கு பணத்தை ஊழல்செய்து எடுத்துக்கொள்கிறார்கள். நாட்டின் பாதுகாவலர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் மோடியிடம் இருந்துதான், நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.