``குமரியின் 50 ஆண்டுத் தேவையை 5 ஆண்டுகளில் முடித்திருக்கிறேன்!” - பொன்.ராதாகிருஷ்ணன் பெருமிதம் | Pon. Rathakrishnan talks about upcoming election in kanniyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:14 (29/03/2019)

``குமரியின் 50 ஆண்டுத் தேவையை 5 ஆண்டுகளில் முடித்திருக்கிறேன்!” - பொன்.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

``கடந்த முறை போட்டியிடும்போது, குளச்சலில் வர்த்தகத் துறைமுகம் கொண்டுவந்தே தீருவோம் என்றார் வசந்தகுமார். இந்தத் தேர்தலில், வர்த்தகத் துறைமுகம் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என்கிறார்” என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், நாகர்கோவில் நாகராஜா திடலில் நடந்தது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கன்னியாகுமரி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் வித்தியாசமான தேர்தல் நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு நாற்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கன்னியாகுமரியில் நடந்துள்ளன. அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம், முத்ரா வங்கி திட்டங்களை இதில் சேர்க்கவில்லை. சாலை அமைத்தல், ரயில்பாதை அமைத்தல், துறைமுகம் அமைப்பதற்காகக் கொண்டுவந்த நிதிகள்தான் நாற்பதாயிரம் கோடி ரூபாய். இந்தியாவில் வேறு எந்தத் தொகுதியிலும் இதுபோல நிதி வந்தது இல்லை. வெற்றிபெற்றால் துறைமுகம், மருத்துவக் கல்லூரி கொண்டுவருவேன் எனக்கூறும் வேட்பாளர்களைப் பார்த்திருக்கிறோம். கடந்தமுறை போட்டியிடும்போது, குளச்சலில் வர்த்தகத் துறைமுகம் கொண்டுவந்தே தீருவோம் என்றார் வசந்தகுமார். இந்தத் தேர்தலில், வர்த்தகத் துறைமுகம் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என்கிறார். வர்த்தகத் துறைமுகம்குறித்து அவருக்கு ஏதாவது தெரியுமா... இளைஞர்களின் எதிர்காலம்குறித்துதான் அவருக்குத் தெரியுமா?

பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம் - ராதாகிருஷ்ணன்

எனக்கு ஒரு நோய், யாரைப் பார்த்தாலும் வர்த்தகத் துறைமுகத்திற்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்பேன். நான் வசந்தகுமாரிடம் விமானத்தில் வைத்து துறைமுகத்திற்கு ஆதரவு கேட்டேன். அதற்கு, கட்டாயம் நீங்கள் துறைமுகம் கொண்டுவாருங்கள். ஆனால், நாங்கள் அறிக்கை கொடுக்க முடியாது என்றார்.  ஓட்டு விழும் பகுதியை மட்டுமே கருத்தில்கொண்டு பேசுகிறார். 28,000 கோடி ரூபாயில் வர்த்தகத் துறைமுகம் வர விடமாட்டோம். ஆனால், நான்காயிரம் கோடியில் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுகம் வேண்டும் என்கிறார்.

இது சந்தர்ப்பவாதம். காங்கிரஸ் மக்களுக்கு செய்யும் துரோகம். இந்த மாவட்ட இளைஞர்கள், மீனவர்களைப் பற்றி கவலைப்படாமல் பிரித்தாளும் சதிகாரரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள். 396 மீனவர்கள் 11 நாடுகளில் சிறைபிடிக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்களில் ஒருவராவது பேசினார்களா. இப்போது போட்டியிடும் வசந்தகுமார் பேசினாரா. அத்தனை பாதிக்கப்பட்ட குடும்பங்களும் என்னிடம் வந்தார்கள். அவர்களை மீட்டுக்கொடுத்த பொன்.ராதாகிருஷ்ணன் மீனவர்களுக்கு எதிரி அல்ல. பா.ஜ.க மீனவர்களுக்கு எதிரி அல்ல. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கியது இலங்கை ராஜபக்‌ஷே அரசு. அவர்களை மீட்டு, வீடுகளில் ஒப்படைக்கும்படி பிரதமர் மோடி கூறினார். அடுத்ததாக, பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது விவசாயத்துறைக்கும், மீன்வளத்துறைக்கும் தனித்தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். அதுகுறித்து ஏற்கனவே பிரதமர்  மோடி கூறிவிட்டார். பா.ஜ.க, பிரதமர் மோடி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களுக்கு எதிரி அல்ல. இந்தத் துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டும்போது, மீன்பிடித் துறைமுகத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்படும்.

பா.ஜ.க

மீன்களுக்கான குளிர்பதன ஏற்பாடு, பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மீனவர்கள் பாதுகாப்பிற்காக கடற்படை, ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும். வர்த்தகத் துறைமுகத்தின் பலனை மீனவர்கள் அனுபவிக்கப்போகிறார்கள். ஒரு வீடுகூட போகாமல், அரை அடி நிலம் போகாமல் துறைமுகம் அமைந்தே தீரும். குமரி மாவட்ட இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் பேசாதீர்கள். குமரி மாவட்டத்தின் 50 ஆண்டுக்கான தேவையை 5 ஆண்டுகளில் முடித்திருக்கிறேன்" என்றார்.