``இது பெருமைப்படுகிற விஷயமா....?”- முதல்வரை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின் | udayanidhi stalin campaign in erode

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:15 (29/03/2019)

``இது பெருமைப்படுகிற விஷயமா....?”- முதல்வரை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ஈரோடு தொகுதியின் வேட்பாளரான கணேசமூர்த்தியை ஆதரித்து ஈரோடு கனிராவுத்தர் குளம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

``இது கலைஞர் பாடம் படித்த மண். அவர் கொள்கை பயின்ற மண். அந்தப் பெரியார் மண்ணில் நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என எடுத்த எடுப்பிலேயே சென்டிமென்டாகப் பேச ஆரம்பித்தவர், அடுத்தடுத்த பேச்சுகளில் முழுக்க மோடியையும், ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்ஸையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

``மோடி எதிர்ப்பு அலை தமிழகம் முழுவதும் உருவாகியிருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். அது மோடி எதிர்ப்பு அலை அல்ல, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கான ஆதரவு அலை. கடந்த தேர்தலின் போது மோடி கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.  கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன், தீவிரவாதத்தை அழிக்கிறேன், புதிய இந்தியாவை உருவாக்குறேன், ஒவ்வொருவருடைய கணக்கிலும் 15 லட்சம் போடுறேன்னு சொன்னார். கடைசியில ஒரு பெரிய நாமத்தைத்தான் நமக்கு போட்டார். இப்போ, அவருக்கு நாம நாமம் போட வேண்டிய நேரம் வந்துருக்கு.

உதயநிதி ஸ்டாலின்

இந்த மோடி அரசாங்கத்துக்குக் கைக்கூலியாகச் செயல்படுகின்ற ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அரசாங்கத்தினுடைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, மக்கள் தினந்தோறும் போராட்டம் நடத்துகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில், ‘என்னுடைய இரண்டு வருட ஆட்சியில்தான் 30 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன’ எனப் பெருமையாகப் பேசியிருக்கிறார். இதுல என்ன பெருமை இருக்கு. மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், இந்த அரசு மீது மக்களுக்குக் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? மக்களுடைய இந்த எதிர்ப்பு நிச்சயமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவிருக்கின்ற தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.