`பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேளுங்கள்’ - கே.எஸ்.அழகிரிக்கு எதிராகக் கொந்தளித்த மாற்றுத்திறனாளிகள் | physically challenged peoples against tamilnadu congress committee president k.s.azhagiri speech

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:30 (28/03/2019)

`பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேளுங்கள்’ - கே.எஸ்.அழகிரிக்கு எதிராகக் கொந்தளித்த மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இழிவாகவும் கொச்சையாகவும் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தினர் ஈரோடு எஸ்.பியிடம் புகார் அளித்திருக்கின்றனர்.

காங்கிரஸ்

மார்ச் 25-ம் தேதி சென்னை சத்யமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``இந்தியாவினுடைய பாதுகாப்பு மோடி அரசாங்கத்தின் கையில் பத்திரமாக இருப்பதாகவும், மோடியால் மட்டும்தான் இந்தியாவைப் பிற நாடுகளுடைய தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியும் என அமித் ஷா சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. கிராமத்திலே `நொண்டி மாமரத்தைப் பாதுகாப்பது போன்று’ என்று சொல்லுவார்கள். அப்படித்தான் மோடி நாட்டினுடைய பாதுகாப்பிற்காக இருக்கிறார்” என்று பேசினார். கே.எஸ்.அழகிரியின் இந்தப் பேச்சு மாற்றுத்தினாளிகளை அவமதிப்பது போன்று இருக்கிறது என மாற்றுத்திறனாளிகள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து அன்றைய தினமே இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே.எஸ்.அழகிரி, ``ஒரு கிராமத்து பழமொழியை மேற்கோள் காட்டி பேசியது மாற்றுத்திறனாளிகள் மனதைப் புண்படுத்தியதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அத்தகைய நோக்கம் எனக்கு இல்லை. நான் குறிப்பிட்ட அந்த வார்த்தையைத் திரும்பப் பெறுகிறேன். அதற்காக எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் கோருகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். அறிக்கை மூலமாக கே.எஸ்.அழகிரி மன்னிப்பு கோரியிருந்த போதிலும், அதை ஏற்காமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தினர் ஈரோடு எஸ்.பியிடம் புகார் மனு அளித்திருக்கின்றனர்.

காங்கிரஸ்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் தலைவரான துரைராஜ் கூறுகையில், ``கே.எஸ்.அழகிரியின் பேச்சு எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. பொதுவெளியில் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இழிவாகப் பேசியவர், நான்கு சுவருக்குள் இருந்துகொண்டு அறிக்கை மூலமாக மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மூலமாகப் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்காத பட்சத்தில் காங்கிரஸ் கட்சியினர் எங்கெங்கு போட்டியிடுகிறார்களே, அவர்களுக்கு எங்களுடைய ஆட்களை வாக்களிக்கக் கூடாது என வலியுறுத்துவோம். மேலும், 2016 திருத்தியமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுடைய ஊனத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கலாம் என இருக்கிறது. இனிப் பொதுவெளியில் அரசியல் கட்சியினர் யாரும் மாற்றுத்திறனாளிகளை அவதூறாகப் பேசாத வகையில், முன்னுதாரணமாக கே.எஸ்.அழகிரிக்குக் குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அபராதமாவது விதிக்க வேண்டும்” என்றார்.