வேலூரில் ரவுடி கொடூரக் கொலை - ஜாமீனில் வெளிவந்த 15 -வது நாளில் நடந்த சம்பவம் | Rowdy murder in Vellore, police investigation is on

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:45 (28/03/2019)

வேலூரில் ரவுடி கொடூரக் கொலை - ஜாமீனில் வெளிவந்த 15 -வது நாளில் நடந்த சம்பவம்

வேலூரில், ஜாமினில் வெளிவந்த ரவுடி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், பொதுமக்களை பீதியடையச் செய்திருக்கிறது.

கொலை செய்யப்பட்ட ரவுடி

வேலூர் சேண்பாக்கம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனி மகன் சத்யா (36). கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியாவார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யா, கடந்த 15 நாள்களுக்கு முன்புதான், ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில்,நேற்று (27-ம் தேதி) மாலை, சேண்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் சுற்றித்திரிந்த ரவுடி சத்யாவை, மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்தனர். 

சத்யா

ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த அவரைப் பார்த்த அப்பகுதி மக்கள், வேலூர் வடக்கு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விரைந்துவந்து, சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மோப்பநாய் சன்னி வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்பிறகு, உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து ரவுடியைக் கொன்ற நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால், வேலூர் மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.