2011-ல் ரங்கசாமிக்கு எதிராக ஜெயலலிதா பேசியது என்ன? - தெறிக்கவிடும் நாராயணசாமியின் செல்போன் யுக்தி | In 2011 what was spoken by Jayalalitha against Rangasamy? Cellphone strategy by Narayanasamy

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:16 (29/03/2019)

2011-ல் ரங்கசாமிக்கு எதிராக ஜெயலலிதா பேசியது என்ன? - தெறிக்கவிடும் நாராயணசாமியின் செல்போன் யுக்தி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசியது குறித்த நாராயணசாமியின் செல்போன் காணொலி அ.தி.மு.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாராயணசாமி

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தி.மு.கவுடனும், என்.ஆர்.காங்கிரஸ் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வுடனும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன. இரு தரப்பும் கூட்டணிக் கூட்டங்களை நடத்தி எதிரணியை மாறி மாறி விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண நிலையம் ஒன்றில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி, தி.மு.க எம்.எல்.ஏ சிவா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ரங்கசாமியை விமர்சித்து ஜெயலலிதா பேசிய ஆடியோவை ஒலிபரப்பி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ்

அமைச்சரவையின் ஆதரவு இல்லாததால் 2008-ம் ஆண்டு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி, 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்தார். அதில் என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களையும், அ.தி.மு.க 5 இடங்களையும் பெற்றது. ஆட்சியில் பங்கு என்ற கனவுடன் இருந்த அ.தி.மு.க-வுக்குக் கடைசி நேரத்தில் அல்வா கொடுத்த ரங்கசாமி, சுயேச்சை எம்.எல்.ஏ-வின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தார் ரங்கசாமி. அதேசமயம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது அ.தி.மு.க.

ஜெயலலிதா

அப்போது தனது வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக புதுச்சேரி வந்த ஜெயலலிதா, ``2011 தேர்தலில் அ.தி.மு.கவும், என்.ஆர்.காங்கிரசும் இணைந்து போட்டியிட்டது. நான் கேட்டுக்கொண்டதால் நீங்களும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தீர்கள். அந்தத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத நிலையில் சுயேச்சை ஆதரவுடன் ஆட்சி அமைத்தவர்தான் ரங்கசாமி. கூட்டணி தர்மத்தை குழிதோண்டிப் புதைத்தவர் மட்டுமல்ல, இந்த மாநிலத்தையே புதை குழியில் தள்ளியவர். இவரது ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி எந்தவித வளர்ச்சியையும் பெற்றிருக்கவில்லை. சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை எனக் குற்றங்கள் பெருகிக் கிடக்கின்றன. மாநிலத்துக்குத் தேவையான எந்தப் பிரச்னைக்காகவும் மத்திய அரசை அணுகி இவரால் சாதிக்க முடியாது. அதற்கான தகுதி ரங்கசாமியிடம் இல்லை. நம்பிக்கை துரோகம் செய்வது ரங்கசாமிக்கு கைவந்த கலை. உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் துரோகம் செய்திருக்கிறார். அதனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்குச் சமம்” என்று மேடையிலேயே வறுத்தெடுத்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க

அந்தக் காணொலியை நேற்றைய நிர்வாகிகள் கூட்டத்தில் தனது மொபைலில் ஓடவிட்டு மைக்கில் வைத்தார் முதல்வர் நாராயணசாமி. அதற்கு நிர்வாகிகள் கூட்டத்திலிருந்து பலத்த கைதட்டலும், கோஷமும் எழுந்தது. காங்கிரஸ் கட்சியில் இந்த அதிரடி யுக்தி எதிர் தரப்பினரை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க