1000 அடி ஆழ்துளை நீரை எளிதாக வெளியேற்றும் பல்ஸ் ஜெட் பைப்!- அசத்தும் கரூர் விஞ்ஞானி | Pallippatti village Scientist invented new motor

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (28/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (28/03/2019)

1000 அடி ஆழ்துளை நீரை எளிதாக வெளியேற்றும் பல்ஸ் ஜெட் பைப்!- அசத்தும் கரூர் விஞ்ஞானி

அளவு கம்மியாக இருக்கும் ஆழ்துளை நீரை கம்ப்ரஸர் மோட்டார் உதவியுடன் எளிதாக இறைக்கும்படியான `பல்ஸ் ஜெட் பைப்பை' கரூர் மாவட்ட உள்ளூர் விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

கம்ப்ரஸர் மோட்டார்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டியைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன். அதிகம் படிக்காத இவரிடம் இயற்கையான விஞ்ஞான அறிவு மேலோங்கி இருக்கிறது. மலைபோல் குவிந்து கிடந்த காது குடைய பயன்படுத்தும் பட்ஸ்களை அழிக்க இயந்திரம், பிளாஸ்டிக்களிலிருந்து டீசலைவிட தரம் வாய்ந்த பைரோ ஆயிலை எடுக்கும் இயந்திரம் என்று பல கண்டுபிடிப்புகளை கண்டிபிடித்துள்ளார். பிளாஸ்டிக்குகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு எந்த கேட்டையும் செய்யாமல் பைரோ ஆயில் எடுக்கும் இவரது கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதோடு, பள்ளப்பட்டி பேரூராட்சியோடு ஒப்பந்தம் போடப்பட்டு, பள்ளப்பட்டி பேரூராட்சிகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளிலிருந்து பைரோ ஆயில் தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில், காஜா மொய்தீன் தனது அடுத்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்.

தற்போது பள்ளபட்டியைச் சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பயன்படுத்தும் 'போர்' கம்ப்ரஸர் மோட்டரின் உதவியோடு, ஆழ்துளை நீரை மேலே கொண்டுவந்து கொடுக்கும் `பல்ஸ் ஜெட் பைப்' ஐ உருவாக்கி விநியோகித்துள்ளார். இந்த பைப், மிதவை மோட்டாருக்குப் பொருந்தாது. கம்ப்ரஸர் மோட்டார் உதவியுடன் தண்ணீரை இழுக்கும்படியான டியூப்புடன் இணைத்து இறக்கிவிட்டால் போதுமானது. கீழ்மட்ட தண்ணீர் குறைவாக இருந்தாலும், அதைச் சரியாக வெளியே எடுத்துவந்து தரும்படி அமைத்துள்ளார்.

கரூர் விஞ்ஞானி காஜா மொய்தீன்

இதுபற்றி, நம்மிடம் பேசிய காஜா மொய்தீன், ``சில போர்களில் மழைக்காலங்களில், தண்ணீர் அதிகமாக இருந்தும் இழுப்புவிசை திணறி வேலைசெய்யும். இந்த `பல்ஸ்ஜெட் பைப்' பொருத்துவதால், எந்தத் திணறலும் இல்லாமல் சமமாகவும், தேவைக்கேற்பவும் தண்ணீரை வெளியே கொண்டுவருகிறது. மண் நிறையவுள்ள பகுதியில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளிக்கொணர்வது கடினம். ஆனால், இந்த விசையில் சிரமமில்லாமல் கொண்டுவர இயல்கிறது. இந்த ஜெட் பைப்பைத் தயாரித்து, இங்குள்ள நிறைய விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளேன். இந்த ஜெட் பைப்பைப் பயன்படுத்திவரும் மொடக்கூர் விவசாயி ராமசாமி என்பவரும் ஒருவர். அவர் எனது ஜெட் பைப்பைப் பயன்படுத்திய பிறகு மகிழ்ச்சியோடு என்னிடம், `லட்ச ரூபாய் செலவு செய்து 900 அடிக்கு போர் போட்டேன். ஆனால், சிறியளவே மண்ணுடன் கலந்து தண்ணீர் வந்தது.

இதனால், மிதவை மோட்டார் / ரெகுலர் கம்பர்ஸருடன் கூடிய இழுவை ஜெட் அமைத்து இயக்கமுடியாத நிலைஉருவானது. நீங்கள் கண்டுபிடித்து கொடுத்த `பல்ஸ்ஜெட் பைப்' பொருத்தி குழாயை இறக்கி, கம்ப்ரஸர் மோட்டாருடன் இணைத்தேன். தற்போது குறைந்த தண்ணீர் ஓட்டத்திலும் மிக நேர்த்தியாக தென்னைக்குத் தண்ணீரை எடுத்து தருகிறது. இவரது இந்த ஜெட் மோட்டாரை மற்ற உறவினருக்கும் தெரியபடுத்தி, அவரும் வாங்கிச்சென்று மகிழ்ச்சியில் உள்ளார்' என்று சொன்னார்.

கரூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம். பல இடங்களில் 1000 அடிகளில் போர் போட்டாலும், குறைவான தண்ணீரே கிடைக்கிறது. அதை வெளியே இழுக்க மத்த போர்வெல் பைப்புகள் திணறும். அதனால், இந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த பல்ஸ்ஜெட் பைப்பை கண்டுபிடித்தேன்" என்றார் மகிழ்ச்சியாக.