சேலம் பயணிகள் ரயில்: மாற்றுத்திறனாளிகளை ஏறவிடாமல் தடுக்கும் போதை ஆசாமிகள்... கண்டுகொள்ளாத ரயில்வே நிர்வாகம்?! | Gambling for Rummy in passenger train - railway department is not taking care

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (28/03/2019)

கடைசி தொடர்பு:13:18 (28/03/2019)

சேலம் பயணிகள் ரயில்: மாற்றுத்திறனாளிகளை ஏறவிடாமல் தடுக்கும் போதை ஆசாமிகள்... கண்டுகொள்ளாத ரயில்வே நிர்வாகம்?!

இந்தக் கும்பலுடன் ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் சேர்ந்து ரம்மி விளையாடியதுதான் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

சேலம் பயணிகள் ரயில்: மாற்றுத்திறனாளிகளை ஏறவிடாமல் தடுக்கும் போதை ஆசாமிகள்... கண்டுகொள்ளாத ரயில்வே நிர்வாகம்?!

தொழில் நகரமான ஓசூரிலிருந்து சேலத்துக்குச் செல்லும் பேசஞ்சர் ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். வழக்கம்போல கடந்த மார்ச் 26-ம் தேதி பெங்களூருவிலிருந்து புறப்பட்ட சேலம் பயணிகள் ரயில் மாலை 17.45-க்கு ஓசூர் வந்தடைந்தது. அப்போது பெரும் கூட்டம் ஒன்று உடல் ஊனமுற்றோருக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியில் முந்தி அடித்துக் கொண்டு ஏறியது. அதில் ஏற முயன்ற புதியவர்களையும், பெண்களையும் ``ஏம்மா... இந்தப் பெட்டியில் ஏறினால் 1,500 ரூபாய் அபராதம் கட்டவேண்டும். என்ன கட்றீயா" என அதிகாரம் செய்தன சில குரல்கள்.  

அந்தக் குரல்களைக் கேட்டு... ஏதோ தவறு இருப்பதாக நாம் உணரவே... அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடலாம் என்ற எண்ணத்துடன் நாமும் அந்தக் கும்பலுடன் அந்தப் பெட்டியில் ஏறினோம். ஆனால், ரயில் புறப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில், நாம் சந்தேகமடைந்ததுபோலவே அந்த ரயில் பெட்டியின் கதவு மூடப்பட்டது. அதன் பிறகு அந்தப் பெட்டியின் கதவு திறக்கப்படவே இல்லை. ரயில் பெட்டியின் கதவு மூடப்பட்ட பிறகு, அங்கு நடந்த அடுத்தடுத்த சம்பவங்கள் நமக்கு அதிர்ச்சியைத் தந்தன. ஆம், அந்த ரயில் பெட்டியில் ஏறியவர்கள்... இரண்டு, மூன்று, நான்கு பேர் கொண்ட குழுக்களாகத் தனித்தனியே பிரிந்து உட்கார்ந்தனர். பையில் கொண்டு வந்திருந்த செய்தித்தாள்களைப் பிரித்துப் போட்டனர். பின்னர், ரம்மி விளையாடுவதற்கு ஏதுவாகச் சீட்டுக் கட்டுகளை எடுத்துப் பறித்துப்போட்டு மாற்றிமாற்றிக் கலக்கி வைத்தனர்.

அந்தக் குழுவிலிருந்த ஒருவர் மற்றவர்களின் பெயர்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக்கொண்ட பிறகு, குழுவிலிருந்த ஒவ்வொருவரும் தங்களின் தகுதிக்கு ஏற்ப பாக்கெட்டிலிருந்து நூறு, ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துப் போட்டு பெட்டிங் கட்டி ரம்மி விளையாட ஆரம்பித்தனர். அதில் ஒரு சிலர், முந்தைய நாள் இழந்த ஆட்டத்தின் தொகையைச் செலுத்திய பிறகு ஆட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அதன்பிறகு, ஒவ்வொருவரின் வெற்றி மற்றும் தோல்விகளைக் கவனமாக, அந்த வெள்ளைத்தாளில் பாயின்டாகக் குறித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் ரம்மி விளையாடி வந்தனர். ரம்மி விளையாடியதில் தோல்வியடைந்து பணத்தை இழந்தவர் மீண்டும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாமல் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ரம்மி விளையாட்டுத் தீவிரமடைந்தபோது, அந்த டென்ஷனைக் குறைக்கச் சிலர் ரயில் பயணம் என்பதையும் மறந்து சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளைப் பயன்படுத்தினர். இந்தக் கும்பலுடன் ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் சேர்ந்து ரம்மி விளையாடியதுதான் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

சேலம் பயணிகள் ரயில்

இவற்றை எல்லாம் கண்காணித்துத் தடுக்க வேண்டிய ரயில்வே துறை அதிகாரிகளும், ரயில்வே போலீஸாரும் நமது பயண எல்லையான தருமபுரி ரயில்வே ஸ்டேஷன் வரும் வரை கண்டுகொள்ளவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பெட்டியின் பக்கம், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஒருவர்கூட எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் நமக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.

 

இதுகுறித்து பெங்களூரு - சேலம் வரை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பெட்டியைக் கண்காணிக்க வேண்டிய மத்திய ரயில்வே படை தருமபுரி மார்க்கம் உதவி ஆய்வாளர் ரங்கநாதனிடம் பேசினோம். சூதாட்டம் குறித்து நாம் தெரிவித்த தகவல்களை கேட்டுக்கொண்ட உதவி ஆய்வாளர் ரங்கநாதன், ``பகல் நேரத்தில் வரும் சில எக்ஸ்பிரஸ் ரயில்களில் சூதாட்டம் ஆடியது தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். பேசஞ்சர் ரயிலில் அதுவும் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் இதுபோன்ற சம்பவம் நடப்பதை இப்போதுதான் என் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளீர்கள். நாளை முதல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்கிறோம்" என்றார் நம்பிக்கையுடன்.

இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர், ``ரயிலில் நடைபெறும் சூதாட்டத்தில் ரயில்வே துறை ஊழியர்களே பணி முடித்துத் திரும்பும்போது இந்த ரம்மி விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தால் சங்கம், யூனியன் என்று பிரச்னை செய்து போலீஸ் மற்றும் உதவி ஆய்வாளர்களையே மாற்றிவிடுகின்றனர்" என்றார் வருத்தத்தோடு. 

``மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்கப்பட்ட ரயில்வே பெட்டியில் ரயில்வே துறை ஊழியர்களே இதுபோன்ற சூதாட்டங்களில் ஈடுபடுவதும், அதையெல்லாம் கவனித்துக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக விடுவதும்தான் பல சமூக விரோதச் செயல்களின் தொடக்கமாக அமைந்துவிடுகிறது" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இனியாவது, இதுபோன்ற குற்றச் செயல்களை தடுத்து, மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான பயணத்துக்குத் தெற்கு ரயில்வே உறுதி அளிக்குமா?

 


டிரெண்டிங் @ விகடன்