சிறுமி தவதியின் உயிரைக் காப்பாற்ற உதவிய வாசகர்களுக்கு நன்றி! | Thanks u readers for helping Davathi

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (28/03/2019)

கடைசி தொடர்பு:20:53 (04/04/2019)

சிறுமி தவதியின் உயிரைக் காப்பாற்ற உதவிய வாசகர்களுக்கு நன்றி!

சில வாரங்களுக்கு முன்னால், மூளையில் கட்டியுடன் உயிருக்குப் போராடும் தன் மகள் தவதியைக் காப்பாற்ற உதவும்படி விகடன் வாசகர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார் அவர் அம்மா தீபிகா.

தவதி

சென்னையைச் சேர்ந்த சிறுமி தவதியின் மூளையில் இருக்கிற தண்ணீர் சுழல முடியாதபடிக்கு, கட்டி அடைத்துக்கொண்டிருந்ததால், தவதிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு, சிறுமி மூச்சு விடுவதற்கான உத்தரவை மூளை தராததால், செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் தவதியின் அம்மா, மகளின் ஆபரேஷன் செலவுக்கு உதவி கேட்டு நம்மிடம் பேசியிருந்தார். நாமும் #SaveThavathi என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். கட்டுரையைப் படித்த விகடன் வாசகர்கள் 40 பேர் தங்களால் இயன்ற தொகையை தவதியின் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த வகையில் 71,390 ரூபாய் சேர்ந்தது. விகடன் நிறுவனமும் ஜி.ஆர்.டி.யும் இணைந்து நடத்தி வருகிற `அறம் செய விரும்பு' புராஜெக்ட் மூலமாக 28,610 ரூபாயைச் சேர்த்து, ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்தை சிறுமி தவதியின் அம்மாவிடம் தந்தது. 

தற்போது, தவதிக்கு ரேடியேஷன் சிகிச்சை நடந்துகொண்டிருப்பதால் இந்தத் தொகை, சிறுமியின் அம்மாவுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்தக் கட்டுரையை வெளியிடுகிற நேரத்தில் தவதியின் அம்மா தீபிகாவுக்கு போன் செய்தோம். ''பாப்பா நல்லா இருக்கா. சளித் தொல்லை மட்டும் இருக்கிறது'' என்று நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தவதியின் மெல்லிய குரல் `அம்மா' என்று அழைத்தது. தவதி நலமாகி விடுவார் என்ற நம்பிக்கை நம் மனதுக்கும் வந்துவிட்டது. தவதியின் உயிரைக் காப்பாற்ற நிதியுதவி அளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.