`வெங்கடேசனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் மதுரை மக்களுக்குப் பெருமை!'- மு.க.ஸ்டாலின் பிரசாரம் | Mk Stalin election campaign at Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:18 (29/03/2019)

`வெங்கடேசனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் மதுரை மக்களுக்குப் பெருமை!'- மு.க.ஸ்டாலின் பிரசாரம்

``காவல் கோட்டம் எழுதி மதுரைக்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர் சு.வெங்கடேசனை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் மதுரை மக்கள் பெருமை அடைவீர்கள்" என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், ``மதுரை ஜான்சிராணி பூங்காவில்தான் 28 ஆண்டுகளுக்கு முன் இளைஞரணியை கருணாநிதி தொடங்கி வைத்தார். அந்தப் பெருமைக்குரிய மதுரையிலிருந்து வாக்கு கேட்கிறேன். மன்னனிடம் நீதிகேட்டுப் போராடிய கண்ணகி வாழ்ந்த ஊரிலிருந்து சு.வெங்கடேசனுக்கு வாக்கு கேட்கிறேன். மதுரையை மையமாக வைத்து காவல் கோட்டம் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தமிழ்ப் பண்பாட்டை தன் எழுத்தில் படைப்பவர், அவருடைய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை எழுதிய பெருமைக்கு உரியவர். இப்படி மண்ணையும், மக்களையும் அறிந்த சு.வெங்கடேசன் போன்ற எழுத்தாளர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.

தேர்தல் வரப்போவது தெரிந்து மோடி மதுரைக்கு வந்து எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அடிக்கல் மட்டும்தான் நாட்டினார். நிதி ஒதுக்கவில்லை. இந்தியா முழுதும் இதே நிலைதான். மோடி தலைமையிலான கார்ப்பரேட் ஆட்சி ஒழியப்போகிறது. தமிழக அரசு மிக கேவலமாக உள்ளது. பொள்ளாச்சியில் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள். நேற்று கோவையில் 7 வயதுச் சிறுமி கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக எடப்பாடி சொல்கிறார். இது பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாட்சியே சாட்சி'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க