`நீங்களே இப்படிச் செய்யலாமா?'- சர்ச்சையில் சிக்கியதால் ரைமிங் ட்வீட்டை நீக்கினார் தமிழிசை | Tamilisai tweet creates controversy

வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:18 (29/03/2019)

`நீங்களே இப்படிச் செய்யலாமா?'- சர்ச்சையில் சிக்கியதால் ரைமிங் ட்வீட்டை நீக்கினார் தமிழிசை

பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை, ரைமிங் பஞ்ச் பேசுவதில் தனித்துவம் வாய்ந்தவர். ஆனால், தற்போது அதுவே அவருக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

தமிழிசை

தி.மு.க வேட்பாளர் கனிமொழி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை இருவரும்,  சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி தொகுதியின் தேர்தல் அதிகாரி முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடந்தது. அப்போது, தமிழிசை மற்றும்  கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.  கனிமொழி, பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால், அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, கணவரின் வருமானம், குற்ற வழக்குகள்  உள்ளிட்டவைகுறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால், தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.  இதையடுத்து, ``எனது வேட்பு மனுவில் எந்தப் பிரச்சனையும் இல்லை, என்மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கும் இல்லை’’ என்று  தூத்துக்குடியில் தமிழிசை  பேட்டியளித்தார்.

தமிழிசை

 ``குற்ற வழக்கு இல்லை. நான் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரை அல்ல.கணவரும் அவ்வாறே. வீண் வதந்தி, தோல்வி பயம்’’ என்று ட்விட்டரில்  ரைமிங்காக ட்வீட் பதிவிட்டிருந்தார். தமிழிசையின் ரைமிங் பஞ்ச் டயலாக்கிற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. காரணம், அவர் பயன்படுத்திய ’குற்றப்பரம்பரை’ என்னும் வார்த்தை. முன்னொரு காலத்தில், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு திசைகளில் குறிப்பிட்ட இன மக்களை  குற்றப்பரம்பரை என்று ஆங்கிலேயர்கள் முத்திரை குத்தினார்கள். அப்பாவி மக்களை 'பிறவிக் குற்றவாளிகளாக' அடையாளப்படுத்தினார்கள். இது,  சமூக நீதிக்கெதிரானது என்று அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் போராடினர். ஆனால் தற்போது, தமிழக அரசியல் களத்தில் முக்கிய பெண் தலைவராகத் திகழும் தமிழிசை, `குற்றப்பரம்பரை என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் தவறானது' என மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதனால், தமிழிசை அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார்.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க