`சரியான நேரத்தில் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவோம்!- ஆணையம் பதில் ஓகே; தி.மு.க கோரிக்கை நிராகரிப்பு | DMK's plea on byelection to three seats

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:21 (29/03/2019)

`சரியான நேரத்தில் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவோம்!- ஆணையம் பதில் ஓகே; தி.மு.க கோரிக்கை நிராகரிப்பு

உச்சநீதிமன்றம்

'தமிழகத்தில், வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இருக்கும்  நாடாளுமன்றத்தேர்தலுடன், காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்' என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  இதையடுத்து, தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்தது.  21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால், அதில் தி.மு.க வெற்றிபெற்றால், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கே வாய்ப்பு இருப்பதால், கழகத் தொண்டர்கள் ஆர்வமாகினர். இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்த இயலாது, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடத்த முடியும். தேர்தல் வழக்கு காரணமாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியாது என தமிழகத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி  வழக்குத் தொடர்ந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒட்டப்பிடாரம் பிரச்னை முடிவுக்குவந்தது. அதேபோல, திருப்பரங்குன்றத்தில் தி.மு.க தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதியே இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும், தேர்தல் வரவுள்ளதால் இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறும் தி.மு.க தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கு மார்ச் 28-ம் தேதி (இன்று) விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தது.

இதையடுத்து,  இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் குறிப்பிட்ட 3 தொகுதிகளில் தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏப்ரல் 18-ம் தேதியே வாக்குப்பதிவு நடத்தமுடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தமுடியும்; அவசர கதியில் நடத்தமுடியாது எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஏப்ரல் 18-க்குப் பிறகு, வேறு தேதிகளில்கூட தேர்தலை நடத்தலாம் என தி.மு.க தரப்பில் கூறப்பட்டது.  சரியான நேரத்தில்தான் நடத்தமுடியும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இருதரப்பு வாதங்ளைக் கேட்ட நீதிமன்றம், ஏப்ரல் 18-ம் தேதி தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தது. அந்தத் தொகுதிகளுக்கு, உரிய நேரத்தில் தேர்தல் நடத்திட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது