கத்தியை எடுத்த கிச்சாவுக்கு கத்தியால் மரணம் - 8 ஆண்டுகளாகத் துரத்திய பகை! | Rowdy murdered by a gang in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (28/03/2019)

கடைசி தொடர்பு:14:18 (28/03/2019)

கத்தியை எடுத்த கிச்சாவுக்கு கத்தியால் மரணம் - 8 ஆண்டுகளாகத் துரத்திய பகை!

கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட ரவுடி கிருஷ்ணமூர்த்தி

சென்னை அரும்பாக்கத்தில் பிரபல ரவுடியாக இருந்த கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி, கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்தபோது, 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்குப் பழிவாங்கவே கிச்சா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர், பிரபல ரவுடி கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி (39). இவர், திருவெற்றியூரில் உள்ள எர்ணாவூரில் தன் குடும்பத்தோடு வசித்துவந்தார். கடந்த 20 ஆண்டுகளாக சென்னை அரும்பாக்கத்தில் குடியிருந்தார். 2004-ம் ஆண்டு வரை கிச்சாவுக்கு அரும்பாக்கம் காவல் நிலையத்தில் மட்டும் 7 வழக்குகள் இருந்தன. அதன்பிறகு திருந்தி வாழ்ந்த கிச்சா, அரும்பாக்கம் பகுதியில் மினி லாரியை வைத்து தண்ணீர் கேன் பிசினஸ் மற்றும் லாரிகளில் பொருள்களை ஏற்றிக்கொண்டு செல்லும் தொழில் செய்துவந்தார். 

 கத்தியால் குத்தி கொலை செய்தவர்கள்

இந்த நிலையில், நேற்று காலை 10:30 மணி அளவில் அரும்பாக்கம் பெருமாள் கோயில் அருகே லாரியை ஓட்டிக்கொண்டு வந்த கிச்சாவை கோயில் வாசலில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. தலை, கை, கால்களில் வெட்டு விழுந்தது. இதனால் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே கிச்சா இறந்தார். பெருமாள் கோயில் அருகே கொலை நடந்ததால், பக்தர்களும் பொதுமக்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரும்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அரும்பாக்கம் போலீஸார் 
வழக்குப்பதிவுசெய்து  விசாரித்தனர். 

 கொலையாளிகளைப் பிடிக்க அண்ணாநகர் உதவி கமிஷனர் குணசேகர் தலைமையில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சங்கர், சரவணன், எஸ்.ஐ-க்கள் தாமரை, பச்சமுத்து ஆகியோர் கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டது. கொலையாளிகள், எழும்பூர் பகுதியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க செல்லும் தகவல், தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார்,            4 பேரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அரும்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (29)  கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அஜித் (24) மற்றும் அவர்களின் நண்பர்கள் பைக் பாபு (24)  கவிராஜ் (24) எனத் தெரியவந்தது. 

 கத்தியால் குத்தி கொலை செய்தவர்கள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சங்கரின் சித்தப்பா ரவுடி நாகராஜ். இவருக்கும் கிச்சாவுக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால், நாகராஜை கடந்த 2011-ல் கிச்சாவின் கும்பல் வெட்டிக் கொலைசெய்தது. இதற்குப் பழிவாங்கவே சங்கரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து கிச்சாவை கொலைசெய்துள்ளனர். அதுதொடர்பாக சங்கர், அஜித், பைக் பாபு, கவிராஜ் ஆகியோரைக் கைதுசெய்துள்ளோம். கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, அரிவாளை பறிமுதல்செய்துள்ளோம்" என்றனர். 

  போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சங்கரின் சித்தப்பா நாகராஜ் கொலை வழக்கில் கைதான கிச்சாவின் கூட்டாளிகள், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் கொலை முயற்சி வழக்கில் சங்கரின் நண்பர்கள் இருவர் சிறைக்குச் சென்றுள்ளனர். அங்கு கிச்சாவின் கூட்டாளிகளுக்கும்  சங்கரின் நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கரின் நண்பர்கள், இனிமேலும் கிச்சா உயிரோடு இருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்று சங்கரிடம் கூறியுள்ளனர். அதன்பிறகே கிச்சாவை  ஸ்கெட்ச் போட்டு சங்கர் மற்றும் அவரின் நண்பர்கள் கொலைசெய்துள்ளனர். தலைமறைவாக இருந்த அவர்களைக் கைது செய்துள்ளோம். இன்னும் இரண்டு பேரைத் தேடிவருகிறோம்" என்றார். 

 கத்தியால் குத்தி கொலை

அரும்பாக்கத்தில், கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட தகவல் காட்டுத் தீ போல பரவியது. ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த கிச்சாவைப் பார்த்த பொதுமக்கள், கத்தியை எடுத்த கிச்சாவுக்கு கத்தியாலே மரணம் என்று கூறினர். 

 சங்கரிடம் போலீஸார் விசாரித்தபோது, `என்னுடைய சித்தப்பா நாகராஜ்தான் எனக்கு எல்லாம். அவரைக் கொலைசெய்ய கிச்சாதான் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தான். இதனால்தான், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிச்சாவைக் கொலைசெய்துவிட்டோம்' என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.