`புல்லட்டில் ரத்தத் துளிகள், துண்டான விரல்கள்'- தே.மு.தி.க முன்னாள் வேட்பாளர் கொடூரக் கொலை | Dmdk former candidate murder

வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (28/03/2019)

கடைசி தொடர்பு:15:58 (28/03/2019)

`புல்லட்டில் ரத்தத் துளிகள், துண்டான விரல்கள்'- தே.மு.தி.க முன்னாள் வேட்பாளர் கொடூரக் கொலை

தே.மு.தி.க.வின் முன்னாள் வேட்பாளர் பாண்டியன்

சென்னை பாடியைச் சேர்ந்த தே.மு.தி.க-வின் முன்னாள் வேட்பாளர் பாண்டியனை வழிமறித்த மர்மக்கும்பல் அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, முல்லைநகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர் தே.மு.தி.க. பிரமுகர். கடந்த சட்டமன்ற தேர்தல்களில் வில்லிவாக்கம், தி.நகர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கட்டட கான்டிராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த பாண்டியனுக்கு செல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். 

பாண்டியனின் குழந்தைகள் தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வார்கள். ஆனால், இன்று ஆட்டோ வரவில்லை. இதனால் பாண்டியன், தன்னுடைய மூத்த மகனை புல்லட் பைக்கில் அழைத்துச் சென்றார். அண்ணாநகரில் உள்ள ஸ்கூலில் விட்டுவிட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாடி குமரன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் வந்தபோது பைக் மற்றும் ஆட்டோவில் வந்த கும்பல் பாண்டியனை வழிமறித்தது. 

முன்னாள் வேட்பாளர் பாண்டியனின் பைக்

இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியன், புல்லட்டில் வேகமாகச் செல்ல முயன்றார். ஆனால், அதற்குள் மர்மக் கும்பல் பாண்டியனை வெட்டியது. அதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். மர்மக் கும்பலிடமிருந்து தப்பிக்க பாண்டியன் முயன்றபோது அவரைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. தலை, கை, கால்களில் வெட்டுக் காயங்கள் விழுந்தன. ரத்தம் வெளியேறி பாண்டியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு மர்மக் கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பியது. 

பொதுமக்கள் கண் முன்னால் நடந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த கொரட்டூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். துணை கமிஷனர் ஈஸ்வரன் கொலை நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். பாண்டியன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கும் அவரின் வீடு அமைந்துள்ள இடத்துக்கும் சில கி.மீட்டர் தூரம்தான் உள்ளது. இதனால் அவர் வீட்டுக்குச் செல்ல சில நிமிடங்களே இருந்தன. இந்தச் சமயத்தில்தான் பாண்டியன் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை வெறித் தாக்குதலில் பாண்டியனின் ரத்தத் துளிகள் அவரின் புல்லட்டில் சிதறிக் கிடந்தது. கொலை நடந்த இடத்திலிருந்து சில தடயங்களை போலீஸார் சேகரித்துள்ளனர்.   

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாண்டியன் கொலை சம்பவத்தை விசாரிக்க உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பொற்கொடி ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை நடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். அதோடு ஆட்டோவில் கொலையாளிகள் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த ஆட்டோவின் பதிவு நம்பரை ஆய்வு செய்துவருகிறோம். 

 முன்னாள் வேட்பாளர் பாண்டியன் கொலை செய்யப்பட்ட இடம்

பாண்டியனின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்ததில் தொடர்ச்சியாக அவருக்கு ஒரு நம்பரிலிருந்து போன் வந்துள்ளது. அவர் யார் என்று விசாரித்துவருகிறோம். எங்களின் முதற்கட்ட விசாரணையில் பாண்டியன், பாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் கட்டி விற்றுள்ளார். அதில் பாண்டியனுக்கும் ஒரு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் யார் என்று விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். 

பாண்டியன் கொலை செய்யப்பட்ட தகவலை கேள்விப்பட்டதும் அவரின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாண்டியனின் சடலத்தைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களிடம் விசாரித்தபோது, `ஸ்கூலுக்கு மகனை அழைத்துச் சென்ற பாண்டியன் வீடு திரும்புவதற்குள் அநியாயமாக கொலை செய்துவிட்டார்கள். அவருக்கு தனிப்பட்ட முறையில் யாரிடமும் பகையில்லை. கட்சிப் பணி, தொழில் என்று பிஸியாக இருந்தார். அவரைக் கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். ஸ்கூலுக்குச் சென்ற மகனுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்' என்று கதறியபடி கூறினர்.  

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பாண்டினை கொலை செய்தவர்கள் யாரென்பதை கண்டறிந்துவிட்டோம். அரசியல் ரீதியாக இந்தக் கொலை நடக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. தொழில் ரீதியாகத்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாண்டியனை கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்துவிடுவோம்" என்றார். 

இதற்கிடையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தே.மு.தி.க-விலிருக்கும் பாண்டியன், பிரசாரத்திலும் ஈடுபட்டுவந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட தகவல் தே.மு.தி.க.வினருக்கு தெரியவந்ததும் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். பாண்டியனின் சடலம் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரின் உறவினர்களும் கட்சியினரும் குவிந்தனர். 

தே.மு.தி.க.நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு ``கட்சியில் நீண்டகாலமாக பாண்டியன் இருந்துவந்தார். கட்சி ஆரம்பித்த சமயத்தில் 2011-ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர், பொறியாளர் அணியில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர். நல்ல மனிதர். அவர் கொலை செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.

பாண்டியனின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்களும் பொதுமக்களும் தவித்தனர்.