``ரகசியம் பாதுகாக்கப்படும்" - கோவை சிறுமி பாலியல் கொலை விவகாரத்தில் உதவி கேட்கும் போலீஸ் | Coimbatore police bit notice on girl child murder issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (28/03/2019)

கடைசி தொடர்பு:16:47 (28/03/2019)

``ரகசியம் பாதுகாக்கப்படும்" - கோவை சிறுமி பாலியல் கொலை விவகாரத்தில் உதவி கேட்கும் போலீஸ்

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் பிட் நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றனர்.

சிறுமி

கோவை துடியலூர் அருகே ஏழு வயது சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நான்கு பேர் மீது சந்தேகம் இருப்பதாகச் சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் கூறியுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கு நாள்களாகியும்  யாரும் கைது செய்யப்படவில்லை. சிறுமியின் பெற்றோர் சந்தேகப்படுபவர்கள், தங்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். இதனால், ஆதாரங்கள் ஏதும் கிடைக்காமல் போலீஸார் , சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

பிட் நோட்டீஸ்

இந்த நிலையில், போலீஸ் தரப்பில் ஒரு பிட் நோட்டீஸ் அடிக்கப்பட்டுள்ளது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும். மேலும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த நோட்டீஸில், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி மணி, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீனாம்பிகை, உதவி ஆய்வாளர்கள், காவல்நிலையங்களின் தொடர்பு எண்கள்  கொடுக்கப்பட்டுள்ளன.  இதனிடையே, ``சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. கழுத்து, கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வாயில் பலத்த காயம் இருந்துள்ளது. நீண்ட நேரம் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான தடையங்கள் இருந்ததாக உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதன் பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே, கோவை பன்னிமடையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது பெண் குழந்தையின்  பெற்றோரை மக்கள் நீதி மையம் துணை தலைவர் மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்  டாக்டர். மகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு வழக்கு நடத்துவதற்காக உதவிகள் செய்யப்படும் என டாக்டர். மகேந்திரன் தெரிவித்தார்.