`லஞ்சத்துக்குப் பதில் இச்சைக்கு இணங்கச் செய்யும் துரதிர்ஷ்டம்!'- கொந்தளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி | madras hc slams corruption officers

வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (28/03/2019)

கடைசி தொடர்பு:16:58 (28/03/2019)

`லஞ்சத்துக்குப் பதில் இச்சைக்கு இணங்கச் செய்யும் துரதிர்ஷ்டம்!'- கொந்தளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

``நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்'' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில், கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சரவணன் என்பவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு வருவாய் கோட்டாச்சியர் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சஸ்பெண்டை மறு ஆய்வு செய்யும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, சரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, ``கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்துக்குப் பதிலாக இச்சைக்கு இணங்கச் செய்யும் துரதிர்ஷ்டவசமான நிலையும் உள்ளது'' என வேதனை தெரிவித்தார். 

தமிழக அரசு


``லஞ்சம் என்பது சமுதாயத்தில் சாதாரண விஷயமாகிவிட்டது. சமீபத்தில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுக்குப் பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துவிடும். வாக்கின் புனிதத்தை சில வாக்காளர்கள் உணர்வதில்லை. ஊழலுக்கு எதிராகப் போராடும் பாண்டவர்களை, ஊழல்வாதிகளான கவுரவர்களிடம் இருந்து நீதிமன்றங்கள்தான் பாதுகாக்க வேண்டும். ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கு அல்ல. ஊழல் செய்யும் நீதித்துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும். இவர்களால் நாட்டின் வளர்ச்சி தடைப்படுகிறது'' என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.