தியாகராஜரை வழிபட்டு திருவாரூர் இடைத்தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ஓ.பி.எஸ்! | Ops started Thiruvarur election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:25 (29/03/2019)

தியாகராஜரை வழிபட்டு திருவாரூர் இடைத்தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ஓ.பி.எஸ்!

திருவாரூரில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஜீவானந்தத்துக்கு ஆதரவாக திருவாரூரில் பிரசாரம் செய்ய வந்த தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருவாரூர் தியாகராஜரை வழிபட்டார்.

ஓபிஎஸ்

நாகை நாடாளுமன்றத் தொகுதி மற்றும் திருவாரூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பி.எஸ் இன்று நாகை, திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாகை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் சரவணனை ஆதரித்து மதியம் ஒரு மணியளவில் நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட பேரளம் பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் துணை முதலமைச்சர் பிரசாரம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பிரசாரம்

அப்போது அவர் பேசியதாவது, ``தற்போது வந்துள்ள இந்தத் தேர்தல் எடை போட்டுப் பார்க்க வேண்டிய தேர்தலாக உள்ளது. தமிழர்களின் நலனைப் பற்றி சிந்திக்கிற நல்லவரெல்லாம் ஒரு கூட்டணியாகவும்.  காங்கிரஸ் தி.மு.க போன்ற அதர்மத்தை வழிநடத்துவோர் ஒரு கூட்டணியாகவும் இந்தத் தேர்தலை சந்திக்கிறோம். 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்த பின்பும் அரசு இதழில் வெளியிடவில்லை. உச்சநீதிமன்றம் சென்று ஜெயலலிதாதான் காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டார். தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை ஜெயலலிதாதான் பெற்றுத் தருவார் எப்பொழுதும். இதுவரை 6 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. 2023-க்குள் 15 லட்சம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும். தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்குவோம்.

வழிபாடு

தி.மு.க-வுக்கு நல்லது செய்தால் பிடிக்காது. ஏழை மக்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நீதிமன்றம் மூலமாக நிறுத்தி வைத்துள்ளனர். உறுதியாக நாங்கள் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று 2,000 ரூபாய் மீண்டும் வழங்குவோம் எனவும். ஸ்டாலின் சொல்கிறார் ஈ.பி.எஸ்,. ஓ.பி.எஸ் நாட்டை தீயிட்டுக் கொளுத்திவிட்டார்கள் என்று. நாங்கள் என்ன தீப்பந்தமா வைத்துக்கொண்டு அலைகிறோம். நாட்டை தீயிட்டு கொளுத்துவதற்கு தி.மு.க ஆட்சியில்தான் தினகரன் பத்திரிகை அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. அதற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது. இந்தக் காலத்திலும் பிரியாணிக்காக தி.மு.க-வினர் சண்டை போட்டுக் கொள்கின்றனர். நாங்கள் நல்லவர்களாக கூட்டு சேர்ந்துள்ளோம். நாட்டை வலிமையாக ஆளும் பிரதமர் மோடியால், நம் நாட்டை தொட்டுப் பார்க்க பிற நாட்டினர் அஞ்சுகின்றனர்.

பிரசாரம்

 

அந்த அளவுக்கு நிர்வாகத் திறன் உள்ளவர் மோடி ஜல்லிக்கட்டு விஷயத்தில் மோடிதான் ஒரே நாளில் சட்டத் திருத்தம் செய்ய உதவினார். சிறுபான்மை மக்களுக்கு மோடி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அ.தி.மு.க-வில்தான் தொண்டன்கூட முதல்வராக முடியும். வேறு எந்தக் கட்சியிலும் இப்படி நடக்க முடியாது; ஆக முடியாது. ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு மாறுவேடங்களில் வந்தார். ஸ்டாலின் டீக்கடையில் டீ குடித்தார். ஆனால், நான் டீ கடையே நடத்தியிருக்கேன். என்கிட்ட முடியுமா. சினிமாவில் நடப்பது போல் ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார்'' என்றார்.

அங்கிருந்து புறப்பட்ட  துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வாகனத்தில் இருந்தவாறே கரம் கூப்பி வழிநெடுக மக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜீவானந்தத்துக்கு வாக்கு சேகரிக்க வருகை தந்த பன்னீர்செல்வம் தேரில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜரை வழிபட்டார். பின்னர் கோயில் குருக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வெற்றி நிச்சயம் என வாழ்த்துக் கூறினர். இதைத்தொடர்ந்து மாலை திருவாரூர் பேருந்து நிலையம் முன்பாக திருவாரூர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.