ஓடும் ரயிலில் பெண் போலீஸிடம் சில்மிஷம்!- கோவை தி.மு.க செயற்குழு உறுப்பினர் கைது | Coimbatore dmk person arrested

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (28/03/2019)

கடைசி தொடர்பு:17:46 (28/03/2019)

ஓடும் ரயிலில் பெண் போலீஸிடம் சில்மிஷம்!- கோவை தி.மு.க செயற்குழு உறுப்பினர் கைது

வடமாநிலப் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வழக்கில் தி.மு.க செயற்குழு உறுப்பினர் சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்திரன்

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள இவர், இருகூர் பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த 10-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க நேர்காணலுக்குச் சென்றுவிட்டு, சந்திரன் ரயிலில் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது, ரயிலில் பயணித்த வட மாநிலப் பெண் ஒருவரிடம் சந்திரன் உள்ளிட்ட 5 பேர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, ரயிலை ஆபத்துக் கால செயின் மூலம் நிறுத்திய அந்தப் பெண், ரயில்வே போலீஸாரிடம் சந்திரன் உள்ளிட்டோர் மீது புகாரும் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சந்திரனைச் சேலம் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, சந்திரன் உள்ளிட்டோர் சில்மிஷம் செய்தது, வடமாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை ரயில்வே போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.

சந்திரன்

இந்த நிலையில், ``எடப்பாடி அரசுக்கு எதிராகவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாகவும் சந்திரன் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் தி.மு.க மீது வீண் பழி சுமத்துவதற்காக அ.தி.மு.க அரசு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது” என்று சூலூர் தி.மு.க-வினர் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்திரன் தி.மு.கவின் சீனியர் நிர்வாகியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.